பாலியல் தொழிலாளர்களை விமர்சிக்கிறார்கள்… ஆனால் வாடிக்கையாளர்களை – வைரலாகும் சமந்தா பதிவு
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம் , கத் , தெறி , ‘24’, ‘மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்த சமந்தா, ரங்கஸ்தலம் , மகாநதி , ஓ பேபி, யூ டர்ன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். தெலுங்கில் நடிப்பு மட்டுமின்றி படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார்.
சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பயணித்து வந்த சமந்தா இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் கடந்த 2025 டிசம்பர் 1-ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு சமந்தா தனது புதிய வாழ்க்கை குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார். தற்போது ராஜ் நிதிமோருவுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து வரும் சமந்தா, கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து சில காலம் மகப்பேறு விடுப்பு எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் சமந்தாவுக்கு பாரம்பரிய முறையில் வளைகாப்பு நடைபெற்றன.

இந்த நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. சிங்கிள் மதரை விமர்சிக்கும் இந்த சமூகம், பொறுப்பின்றி விலகிச் செல்லும் தந்தைகள் பற்றி பேசுவதில்லை. பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிப்பவர்கள், அந்த வன்கொடுமையை செய்தவர்களைப் பற்றி பேசுவதில்லை. உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்; ஆனால் உண்மையை மறைத்து, மூடி மறைப்பவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை. நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.




