எம்ஜிஆருடன் இப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்ததே இல்லை...மெய்சிலிர்த்த சின்னப்பா தேவர்..!

சாண்டோ சின்னப்பா தேவர் என்றாலே தேகப்பயிற்சி செய்து நல்ல உடற்கட்டுடன் இருக்கக்கூடியவர் என்று தான் நம் நினைவுக்கு வரும். சண்டைக்காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர். எம்ஜிஆருடன் நெருங்கிய நண்பர். இவர் எப்படி நண்பரானார் என்று அவரே சொல்லக் கேட்போம்.

சாலி வாஹனன் படத்தின் ஒரு காட்சிக்கு மேக் அப் போட்டு விட்டு முருகா இந்தப் படத்தில் இருந்தாவது என்னைக் காப்பாற்று என்று வெளியே வந்தேன். அந்தப்படத்தில் விக்ரமாதித்தனின் துணை வேடம். பட்டி என்ற பெயரில் நடித்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

எதிரில் கம்பீரமான ராஜ உடையில் ஒருவர் மினுமினுப்பான தேகத்துடன் நின்று கொண்டு இருந்தார். களங்கமற்ற உள்ளத்தைக் காட்டும் கண்கள் அவரிடம் இருந்தன.

Sando chinnappa devar, MGR

என்னைப் பார்த்ததும் அவரும் நின்று விட்டார். முதலில் எங்கள் கண்கள் பேசிக்கொண்டன. பிறகு உதடுகள் பேச ஆரம்பித்தன. நீங்க தான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா என்று வெண்கலக்குரல் கேட்டது. அதற்கு ஆமாம் என்றேன். நான் தான் விக்கிரமாதித்தன். பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

உடற்பயிற்சி செய்கிறீர்களா? என்றார். ஆமாம் என்றேன். தொடர்ந்து எங்களுக்குள் அடிக்கடி பழக்கம் ஏற்பட்டது. கோவை வீரமாருதியில் தேகப்பயிற்சி சாலை உள்ளது. அங்கு தான் நான் உடற்பயிற்சிக்கு செல்வேன். எம்ஜிஆரும் வருவார். மல்யுத்தம், கத்திச்சண்டை, குத்துச்சண்டை, சிலம்பம், கட்டாரி என பல பயிற்சிகளை யாரும் சொல்லித்தராமலே நேர்த்தியாக செய்வார்.

அவர் உடன் பயிற்சி செய்பவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பார். அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்திப்போம். எங்களுக்குள் இன்ப துன்பங்களை வெளிப்படையாகப் பேசிக் கொள்வோம். மருதமலை முருகனைப் போய் பார்த்து மனதார தரிசித்து விட்டு வந்தோம்.

Rajakumari

ஜூபிடர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆரை கதாநாயகனாகப் போட்டார்கள். அதில் முரடனாக நடிக்க எம்ஜிஆர் என்னை அழைத்தார். நீங்க தான் இந்த வேடத்திற்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என்றார். ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் விடவில்லை.

அவர்கள் உங்களையே இந்தப்படத்தில் தான் முதன்முதலாகக் கதாநாயகனாகப் போட்டு இருக்கிறோம். நீங்களே இன்னொருவரை சிபாரிசு செய்யலாமா? வேறு பெரிய ஆள் யாரையாவது போட்டால் தான் நல்லாருக்கும் என்றனர்.

Sando chinnappa devar

ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை. திறமையான ஆள் நம்மிடையே இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? திருப்தியாக இருந்தால் வைத்துக் கொள்வோம். எந்தவிதமான சர்ந்தப்பமும் தராமல் ஒரு ஆளை எடைபோட்டு விடக்கூடாது. தேவரையே போடுங்கள் என உறுதியாகச் சொல்லிவிட்டார்.

அதன்பின் அந்த வேஷம் எனக்கே கிடைக்க நான் நடித்தேன். அந்த சண்டைக்காட்சி பிரமாதமாக அமைந்தது. நானும் எம்ஜிஆரும் நிஜமாகவே சண்டை போட ஆரம்பித்து விட்டோம். ஒருவருக்கொருவர் ரத்த காயம்...வெட்டுக்காயம்...!

இப்படி ஒரு சண்டைக்காட்சியை நான் பார்த்ததே இல்லை...அங்கிருந்த எல்லோரும் பாராட்டினார்கள். தொடர்ந்து மோகினி, மர்மயோகி என வாய்ப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து என்னை சொந்தப்படம் தயாரிக்க ஊக்கமூட்டினார். அதுதான் தாய்க்குப் பின் தாரம். படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து தாய்சொல்லைத்தட்டாதே என 4 படங்களில் நடித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it