எம்.ஜி.ஆரும் சின்னப்பா தேவரும் போட்டுக்கொண்டு ஒப்பந்தம்… நட்புன்னா இப்படில இருக்கனும்!!
சாண்டோ சின்னப்பா தேவரும் எம்.ஜி.ஆரும் மிக நெருங்கிய நண்பர்கள். எம்.ஜி.ஆரை வைத்து சின்னப்பா தேவர், கிட்டத்தட்ட 16 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர்களின் நட்பை பார்த்து சினிமா உலகில் வியந்த பலரும் உண்டு.
இந்த நிலையில் இருவரும் சினிமாவுக்குள் வந்த புதிதில் ஒரு நாள் சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரிடம் “நாம் இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். நம் இருவரில் யார் முதலில் முன்னுக்கு வருகிறாரோ, அவர் அடுத்தவரை கைத்தூக்கி விடவேண்டும். இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்துகொள்வோம்” என கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் சரி என்று தலையாட்டியுள்ளார்.
அதற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” திரைப்படத்தில் சின்னப்பா தேவரை ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனரிடம் வேண்டிக்கேட்டுக்கொண்டாராம் எம்.ஜி.ஆர். அதன்படி அத்திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தாராம் சின்னப்பா தேவர்.
இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்த பிறகு, சின்னப்பா தேவருக்கு அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாம். அப்போது சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரின் இல்லத்திற்குச் சென்று “நான் ஒரு திரைப்படத்தை தயாரிக்கப் போகிறேன். நீங்கள்தான் அதில் ஹீரோவாக நடிக்க வேண்டும். முன்பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என தனது கையில் இருந்த பணத்தை கொடுத்தாராம்.
இதையும் படிங்க: ஒரே ரூமிற்குள் 500 ரஜினி!!… அரண்டுபோன பிரபல இயக்குனர்… சூப்பர் ஸ்டார் வீட்டிற்குள் இருக்கும் கண்ணாடி அறையின் ரகசியம் என்ன??
சின்னப்பா தேவர் இவ்வாறு கூறியவுடன், இருவருக்குள்ளும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. உடனே அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இவ்வாறுதான் சாண்டோ சின்னப்பா தேவர் தொடங்கிய தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படமான “தாய்க்குப் பின் தாரம்” திரைப்படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். இத்திரைப்படத்தை தொடர்ந்து சின்னப்பா தேவர் தயாரித்த 15 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார். அந்த அளவுக்கு இருவரின் நட்பும் மிகவும் இருக்கமாக இருந்தது.