வாரந்தோறும் விருந்து!.. எம்ஜிஆரின் மாப்பிள்ளையாகவே வலம் வந்த அந்த திரைப்பிரபலம்!..
தமிழ் சினிமாவில் இசையில் தன் சம்ராஜ்யத்தை செய்து கொண்டவர்களில் இரட்டையர்களாக வலம் வந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி. இருவரும் சேர்ந்து இசையமைத்த பாடல்களில் இன்றளவும் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பாடல் எது என்றால் கே. சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘ஆலயமணி’ படத்தில் அமைந்த ‘கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?’ என்ற பாடல்.
இந்த பாடல் கண்ணதாசன் வரிகளில் டி.எம்.சௌந்தராஜன் - எல்.ஆர். ஈஸ்வரி குரலில் வெளிவந்த பாடலாகும். இவர்கள் இசையமைத்த ஏராளமான பாடல்களில் இந்த பாடல்தான் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஏராளாமான படங்களுக்கு இசையமைத்த இந்த இரட்டையர்கள் ஒரு காலத்தில் தனித்தனியே பிரிந்து இசையமைக்கத் தொடங்கினார்கள்.
சங்கர் மற்றும் கணேஷ்
இதில் விஸ்வநாதனிடம் உதவியாளர்களாக இருந்தவர்கள் தான் சங்கர் மற்றும் கணேஷ் எனும் மற்றுமொரு இசையரசர்கள். 70, 80களில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், என முன்னனி நடிகர்களுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து கொடிகட்டி பறந்தார்கள். இவர்கள் உதவியாளராக இருக்கும் போது ஒர் நாள் கணேஷ் சங்கரிடம் நாம் தனியாக வந்து வாய்ப்பு தேடி இசையமைக்கலாம் என்ற ஐடியாவை சங்கரிடம் சொன்னாராம்.
ஆனால் சங்கரோ இது எம்.எஸ்.விக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும். ஏதோ உதவியாளராக இருந்து பொழப்பை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதுவும் போச்சுனா என்ன ஆகுறது? என்று வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். உடனே கணேஷ் சரி நான் முதலில் வாய்ப்பு தேடுகிறேன், அதன் பின் நீ வா, என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.
உதவிய கண்ணதாசன்
அப்போது கணேஷுக்கு உதவிக்கரமாக இருந்தவர் கண்ணதாசன். அவரை நாடி எனக்கு எப்படியாவது வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள் என்று கேட்க அவரும் சில படவாய்ப்புகளை தேடிக்கொடுத்திருக்கிறார். இப்படி படிப்படியாக ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் கணேஷ். ஒரு சமயத்தில் சங்கர் இறந்து போக அவரது நினைவாக தன் பெயரான கணேஷுடன் சேர்த்து சங்கர் கணேஷ் என மாற்றிக் கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆருடன் நல்ல நட்புறவுடன் இருந்தவர் சங்கர் கணேஷ். எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடலான ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ என்ற பாடல் சங்கர் கணேஷ் இசையில் வெளிவந்த பாடலாகும். சங்கர் கணேஷ் அக்காலத்தில் பெரிய தயாரிப்பாளரான ஒருவரின் மகளை காதலித்துக்கொண்டிருக்க இது அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரிந்ததும் முதலில் மறுத்திருக்கிறார்கள்.
எம்ஜிஆரின் தில்லாலங்கடி
அதன் பின் ஒரு நாள் சங்கர் கணேஷுக்கு தொலைபேசியில் அந்த பெண்ணின் அப்பா அழைத்து நாளைக்கு பெண் பார்க்க வாருங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாராம். இவருக்கு ஒரே ஆச்சரியம். அதன் பின் தெரிந்தது இது எம்ஜிஆரின் வேலை என்று. அவர் தான் அந்த பெண்ணின் அப்பாவிடம் சங்கர் கணேஷை பற்றி நல்ல விதமாக சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
மாப்பிள்ளை சங்கர் கணேஷ்
பின் சங்கர் கணேஷ் திருமணமும் முடிந்து அதிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் எம்ஜிஆர் வீட்டுக்கு சங்கர் கணேஷும் அவரது மனைவியும் சென்று காலை டிஃபன் முடித்து எம்ஜிஆருடன் சேர்ந்து ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பார்களாம். அப்போது எம்ஜிஆர் சங்கர் கணேஷிடம் அவரது மனைவியை சுட்டிக்காட்டி இவள் என் மகள் போல் ஆதலால் நீ என் மாப்பிள்ளை என்று கூறினாராம். மேலும் அதிலிருந்து சங்கர் கணேஷை எம்ஜிஆர் மாப்பிள்ளை என்று தான் அழைப்பாராம்.