அரச்ச மாவையே அரச்சா இப்படித்தான் நடக்கும்… எந்த படத்தை சொல்கிறார் சந்தானம்?
சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் “ஏஜெண்ட் கண்ணாயிரம்”. இத்திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. எப்போதும் சந்தானம் திரைப்படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. சந்தானத்தின் அசத்தலான காமெடிக்காகவே பல திரைப்படங்கள் வெற்றிபெற்றுள்ளன.
ஆனால் சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியதில் இருந்து சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக இல்லை என விமர்சகர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக சந்தானம் சமீபத்தில் நடித்து வெளியான “குலு குலு” திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும் அதில் சந்தானம் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, மிகவும் சீரீயஸான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆதலால் அத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு இல்லாமல் போனது.
அதே போல் “ஏஜெண்ட் கண்ணாயிரம்” திரைப்படத்திலும் சந்தானம் மிக சிரீயஸான ரோலிலேயே நடித்திருந்தார். ஆதலால் அத்திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சந்தானத்திடம் “தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போது கன்டென்ட் என்பது எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சந்தானம் “மக்கள் எப்போதும் புத்திசாலியாகத்தான் இருந்திருக்கிறார்கள். பல வருடங்களாக நல்ல படங்கள் மட்டும்தான் ஹிட் ஆகி வருகிறது. எல்லா படங்களும் ஹிட் ஆவது கிடையாது. அதே மாதிரிதான் இப்பவும் இருக்கிறார்கள்.
நல்ல கதையம்சமாக புதிதாக யோசித்து படமெடுத்தால் மக்கள் ஹிட் ஆக்குவாங்க. கொஞ்சம் அரச்ச மாவையே அரச்சா அவ்வளவுதான். அந்த காலத்துல லைட் ஆ துப்புனாங்க. இப்போ மீடியா இருக்குறதுனால எங்க போனாலும் துப்புறாங்க” என கூறியிருந்தார்.
அதன் பின் சந்தானத்திடம் தற்போதுள்ள இணைய விமர்சகர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம் “நீங்க கரெக்ட்டா உழைச்சி கஷ்டப்பட்டு படம் பண்ணுனீங்கன்னா அந்த விமர்சனங்களை பத்தி கவலைப்படத் தேவையில்லை. நீங்க கொஞ்சம் ஓபி அடிச்சோ அல்லது அரச்ச மாவையே அரச்சோ வச்சிருந்தீங்கன்னா அந்த விமர்சனங்களை நீங்க உள்வாங்கி ஃபீல் பண்ணித்தான் ஆகனும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.