Cinema History
கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்த டி.ஜே.சாண்டி… சந்தோஷ் நாராயணனன் ஆனது எப்படி? ஆச்சரிய பின்னணி…
தமிழ் சினிமா உலகின் வெற்றி இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் தனது தொடக்க காலத்தில் பெரிய சறுக்கல்களையே சந்தித்து இருக்கிறார். சிறு வயது முதலே மியூசிக் மீது பெரிய ஆர்வம் கொண்டிருந்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். தொடர்ந்து இசையின் மீது அதிக நாட்டம் இருந்தவருக்கு குடும்ப சூழல் பெரும் கவலையாக மாறி இருக்கிறது. இதனால் தனது இசைக்கனவை மூட்டைக் கட்டி வைத்து விட்டு வேலைக்கு சென்று இருக்கிறார்.
கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரே ஒரு நாள் மட்டும் சாஃப்ட்வேட் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறார். முதல் நாளை வேலையின் மதிய உணவு இடைவெளியின்போது, `நீயெல்லாம் இன்னும் காலேஜ் படிப்பையே முடிக்கலை’ங்குற ரேஞ்சுக்கு கம்பெனியில் பேசியிருக்கிறார்கள். இதில் கவலையடைந்தவர் தனது தாயிடம் இதுகுறித்து இடைவேளை நேரத்தில் கால் செய்து கவலைக் கொண்டு இருக்கிறார். முதலில் காலை எடுத்தவுடன் அவர் தாய் கேட்டது என்னப்பா வேலையை விட்டுவிட்டாய் தானே? என்பதே. அதை தொடர்ந்து அவர் சொன்ன விஷயத்தை முழுமையாக கேட்ட அவர் தாய் நமக்கு இசை தான் சோறு போடும். அதில் உன் கவனத்தை செலுத்து என அறிவுரை சொல்லி இருக்கிறார்.
இதை தொடர்ந்தே தனது முழு கவனத்தையும் இசையில் செலுத்தி இருக்கிறார். ஆனால் வறுமை அவரை வாட்டி எடுத்திருக்கிறது. ஆந்திரா மெஸ்ஸில்தான் சாப்பாடு. அந்த மெஸ்ஸின் உரிமையாளர் இவரிடம் நல்ல மதிப்பைக் கொண்டிருந்திருக்கிறார். ஒருநாள், என்னப்பா ரொம்ப கஷ்டப்படுறியானு அவர் கேட்க, இவரும் உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து, மெஸ்ஸில் இருந்த பழைய சேர் ஒன்றை இவருக்கு அவர் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்த சேரில்தான் இவரின் மியூஸிக்கைக் கேட்க வந்தவர்களை அமர வைப்பாராம். அதற்கு முன்பு வரை தரையிலேயே அமர வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு பொருளாதாரரீதியாக ரொம்பவே கஷ்டப்பட்டவர் நம்ம சந்தோஷ் நாராயணன்.
தொடர்ந்து, வாய்ப்புக்காக போராடிக் கொண்டு இருந்த சுழலில் கை செலவுக்காக ரிச்சி தெருவில் கம்ப்யூட்டர் அசெம்பிள் செய்தும் இருக்கிறார். பல இடங்களில் டிஜேவாகவும் பணியாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது இவரின் பெயர் டிஜே சாண்டி என அழைத்து இருக்கிறார்கள்.
முதன்முதலில், சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், இவரின் மெட்டுகளில் திருப்தி அடையாத படக்குழு இவரை நிராகரித்து விட்டனராம். இதை தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித் தான் தனது அட்டக்கத்தி படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளரக்கு இதில் துளிக்கூட திருப்தி இல்லையாம். உடனே, உங்கள் மீது ரஞ்சித் மட்டுமே நம்பிக்கை வைத்து இருக்கிறார். நன்றாக செய்தால் மட்டுமே எனக்கும் நம்பிக்கை வரும் எனக் கூறி இருக்கிறார். அதை தனது வெற்றி வார்த்தையாக எடுத்து கொண்டவர். இன்று கோலிவுட்டில் தனக்கென் பெரும் நம்பிக்கையை சந்தித்துவிட்டார். தற்போது டிஜே சாண்டி என்பதையே ஆச்சரியமாக பார்க்க வைத்தும்விட்டார்.