“எனக்கு நேஷனல் அவார்டா? என்ன கலாய்க்குறீங்களா?”… உறக்கத்தில் இருந்த சரண்யாவை கடுப்பேத்திய நபர்…
தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே முதலில் ஞாபகம் வருபவர் சரண்யா பொன்வண்ணன்தான். அந்த அளவிற்கு ஒரு யதார்த்த அம்மாவாக பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் சரண்யா.
சரண்யா பொன்வண்ணன் தனது சினிமா வாழ்க்கையின் தொடக்க காலத்தில் “நாயகன்”, “என் ஜீவன் பாடுது”, “அஞ்சலி” போன்ற பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகுதான் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழின் முக்கிய ‘அம்மா’ நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
குறிப்பாக “தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார் சரண்யா பொன்வண்ணன். இந்த நிலையில் தனக்கு தேசிய விருது கொடுக்கப்போவதாக அறிவித்த அந்த தருணத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சரண்யா பொன்வண்ணன் பகிர்ந்துள்ளார்.
“ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு முழுவதும் ஒரு காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இரவு முழுவதும் முழித்திருக்க வேண்டுமே என்பதனால் அன்றைய நாள் மதியமே நான் தூங்கிவிட்டேன்.
அப்போது மதியம் மூன்றரை மணி அளவில் எனக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. நான் அரைத்தூக்கத்தில் எழுந்து அழைப்பை ஏற்று ‘யார்?’ என கேட்டேன். ‘உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைச்சிருக்கு’ என்றார் ஒருவர். ‘நேஷனல் அவார்டா, யார் அது கேலி பண்றது. ஃபோனை வைங்க’ என்று கூறிவிட்டு மீண்டும் தூங்க சென்றுவிட்டேன்.
அதன் பின் இரண்டு முறையும் அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. யாரோ கேலி செய்கிறார்கள் என்று நினைத்து இரண்டு முறையும் பேசிவிட்டு கட் செய்துவிட்டேன். அதன் பின் மூன்றாவது முறையாக அதே நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. நான் தூக்கத்தில் இருந்து முழித்து விட்டேன்.
இதையும் படிங்க: “பெரிய ஆள் ஆகிட்டா என்னைய மறந்துடுவாங்க”… “லவ் டூடே” இயக்குனர் மீதுள்ள வருத்தத்தை பகிர்ந்த மூத்த நடிகர்…
என்னுடைய கணவரை அழைத்து, யாரோ ஒரு நபர் எனக்கு மீண்டும் மீண்டும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நேஷனல் அவார்ட் கிடைத்துவிட்டது என கூறுகிறார். யார் என்று தெரியவில்லை என கூறினேன். அதன் பின் தான் எனது கணவர் விசாரித்தார். அப்போதுதான் எனக்கு நிஜமாகவே தேசிய விருது கிடைத்திருப்பது தெரிய வந்தது” என்று சரண்யா பொன்வண்ணன் அப்பேட்டியில் மிகவும் கலகலப்போடு கூறினார்.