பொன்னியின் செல்வனில் ரஜினி நடித்திருந்தால் இப்படித்தான் ஆகியிருக்கும்- சூப்பர் ஸ்டாரையே வம்புக்கு இழுக்கும் சரத்குமார்!
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பலர் கொண்டாடி வந்தாலும், சிலர் இத்திரைப்படத்தின் மீது விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர். நாவலில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தை கொல்வது போல் கதை வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்த விக்ரம் தற்கொலை செய்துகொள்வது போல் காட்சியமைக்கப்பட்டிருந்தது. ஆதலால் “பொன்னியின் செல்வன்” நாவல் விரும்பிகள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சோழர்களின் உண்மை வரலாற்றை மணிரத்னம் காட்சிப்படுத்தவில்லை எனவும் இணையத்தில் இது குறித்து பல விவாதங்கள் எழுந்து வருகின்றன.
அதே போல் ஒரு பக்கம் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “கல்கி எழுதிய கதையே புனைவுதான். உண்மையான வரலாறு அல்ல” என்று கூறிவருகின்றனர்.
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதனை மணிரத்னம் ஏற்கவில்லை எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரத்குமார், பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர், “பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் உங்களுக்கு பதில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் என்ன ஆகிருக்கும்?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சரத்குமார், “ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தால் நிச்சயம் அவர்தான் போஸ்டர்களில் பெரிதாக இருந்திருப்பார். நந்தினி பக்கத்தில் இருந்திருப்பார். ஆதித்த கரிகாலன் சின்னதாக போடப்பட்டிருப்பார். அதுதான் மார்க்கெட்டிங்” என கூறியிருந்தார்.