இவர்தான் ரியல் சர்தார்… உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்… வரலாற்றில் மறைந்து போன உளவாளியின் சோகக் கதை…
கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்த்தி, ராசி கண்ணா, ரஜிசா விஜயன், லைலா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சர்தார்”. இத்திரைப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.
உளவுத்துறை, ரா ஏஜென்ட் போன்ற பல சுவாரசியமான விஷயங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் பி.எஸ்.மித்ரன், “சர்தார்” படம் உண்மையாகவே வாழ்ந்த ஒரு உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என கூறியிருந்தார். மேலும் அவர் அந்த பேட்டியில் அந்த உளவாளியை குறித்து பல சுவாரசியமான சம்பவங்களையும் கூறியிருந்தார்.
“ரவீந்திர கௌஷிக் என்று ஒரு உளவாளி இருந்தார். அவர் அடிப்படையில் ஒரு நாடக கலைஞர். அந்த நாடக நடிகரை உளவாளியாக மாற்றி பாகிஸ்தானுக்கு அனுப்பினார்கள். அங்கே ஒரு இஸ்லாமிய பெயருடன் வலம் வந்து பாகிஸ்தானின் குடியுரிமையை வாங்கினார். அதன் பின் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் மேஜர் என்ற பதவிக்கு உயர்ந்தார்.
இவ்வாறு பாகிஸ்தான் ராணுவத்தில் வேலை பார்த்துக்கொண்டே இந்தியாவுக்கு உளவுச் செய்தியை கொடுத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் ரவீந்திர கௌஷிக் ஒரு இந்திய உளவாளி என்று பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரிந்துவிட்டது. அதன் பின் அவரை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தினார்கள். பல நாட்கள் கழித்து அவர் பாகிஸ்தான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார். இவரை அடிப்படையாக வைத்துத்தான் சர்தார் கதையை எழுதினேன்” என அப்பேட்டியில் பி.எஸ்.மித்ரன் கூறியிருந்தார்.
மேலும் அப்பேட்டியில் பேசிய அவர் “ரவீந்திர கௌஷிக் ஒரு மிகப்பெரிய உளவாளி. ஆனால் அவரை பற்றி நான் ஆய்வு செய்துதான் தெரிந்துகொள்ள வேண்டியதாகி இருந்தது. இந்தியாவுக்கு எவ்வளவு பெரிய தியாகத்தை அவர் செய்திருக்கிறார். ரவீந்தர கௌஷிக்கை பற்றி நமக்கு இப்போது தெரியும். ஆனால் நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனை உளவாளிகள் இருக்கிறார்களோ?” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.