திரையுலகில் சாதித்த சரிதா நடித்த சூப்பர்ஹிட் படங்கள்
நடிகை சரிதா ஒரு குடும்பப்பாங்கான நடிகை. இவரது நடிப்பு அபாரமானது. 80களில் இவர் படங்கள் திரைக்கு வந்து விட்டால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். 141 படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட யாரும் சோடை போனது இல்லை. அது போல் இவரும் திரையுலகில் சாதித்தவர் தான்.
1978ல் மரோசரித்ரா என்ற தெலுங்கு படத்தில் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தமிழ்ப்படங்களில் நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். தாய்க்குலங்களின் பேராதரவைப் பெற்றார். இவர் நடித்த சில படங்களைப் பார்க்கலாம்.
அவள் அப்படித்தான்
1978ல் வெளியான படம். ருத்ரையா திரைக்கதை எழுதி, தயாரித்து இயக்கினார். கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சரிதா, சிவசந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் தேன் ரகங்கள். உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே, வாழ்க்கை ஓடம் ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் பன்னீர் புஷ்பங்களே பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.
தப்புத்தாளங்கள்
1978ல் வெளியான இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரிதா, சாந்தாராம், சுந்தர், பிரமிளா உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயபாஸ்கர் இசை அமைத்த படம். இப்படத்தில் கமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். சரசுவாக வரும் சரிதா படத்தின் வெற்றிக்கு பிளஸ் பாயிண்ட். அழகான இளமங்கை, என்னடா பொல்லாத, தப்புத்தாளங்கள் உள்பட பல பாடல்கள் உள்ளன.
கொம்பேறி மூக்கன்
1984ல் வெளியான இப்படத்தை ஜெகநாதன் இயக்கினார். இளையராஜாவின் இன்னிசை மனதை மயக்கும் ரக பாடல்களைக் கொடுத்தன. தியாகராஜன், சரிதா, ஊர்வசி, செந்தாமரை, கவுண்டமணி, தேங்காய் சீனிவாசன். டெல்லி கணேஷ், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். எல்லாமே நல்லபடி, கன கனவென, ஊஞ்சல் மனம் உலா, ரோஜா ஒன்று ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
புதுக்கவிதை
1976ல் வெளியான இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் விசு. இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினிகாந்த், ஜோதி, சுகுமாரி, சரிதா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் தூள் கிளப்பின. வெள்ளை புறா ஒன்று, வாரே வா, வா வா வசந்தமே உள்பட பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
வேதம்புதிது
1987ல் வெளியான இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். சத்யராஜ், அமலா, சாருஹாசன், ராஜா, நிழல்கள் ரவி, சரிதா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவேந்திரனின் இசையில் கண்ணுக்குள் 100 நிலவா இது ஒரு கனவா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. மந்திரம் சொன்னேன், புத்தம் புது ஓலை ஆகிய பாடல்களும் உள்ளன.