ஒரே ஒரு பொய்யால் ஹிட் படத்தின் வாய்ப்பை இழந்த சரோஜா தேவி… இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது!!
1959 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கல்யாண பரிசு”. இத்திரைப்படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
“கல்யாண பரிசு” திரைப்படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என முடிவெடுத்தனர். அதன் படி “பெல்லி கனுகா” என்ற பெயரில் இத்திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் ஸ்ரீதர். இந்த தெலுங்கு ரீமேக்கில் நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடிக்க, இதிலும் சரோஜா தேவிதான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
“பெல்லி கனுகா” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு நாள், சரோஜா தேவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஒரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கச் சென்னார். ஆதலால் இயக்குனர் ஸ்ரீதர் ஒரு நாள் ஷூட்டிங்கை தள்ளிவைத்தார். அதன் பின் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தபிறகு, இறுதிநாள் அன்று சரோஜா தேவி ஸ்ரீதரிடம் “நாம் மீண்டும் சந்திப்போம்” என கூறினாராம்.
சரோஜா தேவி ஏன் அப்படி கூறினார் என்றால், அதாவது ஸ்ரீதர் “கல்யாண பரிசு” திரைப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்வதாக இருந்தது. அந்த ஹிந்தி ரீமேக்கிலும் நம்மைத்தான் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்வார் என்ற எண்ணத்தில் அவர் “மீண்டும் சந்திப்போம்” என கூறினாராம்.
சரோஜா தேவி இந்த காரணத்திற்காகத்தான் “மீண்டும் சந்திப்போம்” என்று கூறுகிறார் என்பதை தெரிந்துகொண்ட ஸ்ரீதர் “நான் ஹிந்தியிலும் உங்களைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் நீங்கள் அன்று ஒரு காரியம் செய்தீர்கள் பாருங்கள், அதிலிருந்து என்னுடைய முடிவை நான் மாற்றிக்கொண்டேன்” என கூறினாராம்.
இதையும் படிங்க: விஜய்யின் மகன் டைரக்ட் செய்யப்போற ஹீரோ இவர்தான்… சீக்ரெட்டை பகிர்ந்த எஸ்.ஏ.சி…
அதாவது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஒரு நாள் படப்பிடிப்பை தள்ளி வையுங்கள் என்று கேட்ட சரோஜா தேவி, அன்று அவர் வீட்டிலே ஓய்வெடுக்கவில்லையாம். இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டாராம். இது ஸ்ரீதருக்கு அன்றே தெரிய வந்துவிட்டதாம்.
“நீங்கள் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கு போக வேண்டும் என்றால் தாராளமாக என்னிடம் உண்மையை சொல்லியிருக்கலாம். நான் நிச்சயமாக அனுமதி கொடுத்திருப்பேன். ஆனால் என்னிடம் பொய் சொல்லிவிட்டு வேறு ஒரு படப்பிடிப்பிற்கு சென்றீர்களே, அது என்னுடைய மனதை மிகவும் பாதித்துவிட்டது. அதனால் இந்த ஹிந்தி ரீமேக்கில் உங்களை நான் நடிக்க வைப்பதாக இல்லை” என்று சரோஜா தேவியின் முகத்திற்கு நேராகவே கூறிவிட்டாராம் ஸ்ரீதர். இவ்வாறு ஒரு பொய்யால் ஹிந்தியில் நடிக்க இருந்த வாய்ப்பை சரோஜா தேவி தவறவிட்டிருக்கிறார்.