இப்படி இருந்தா உதவி இயக்குனர் ஆக முடியாது.. – சசிக்குமாரை ஓட விட்ட பாலா!..
திரைத்துறையில் உதவி இயக்குனராக அறிமுகமாகி பிறகு இயக்குனராகி தற்சமயம் வெற்றிக்கரமாக நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சசிக்குமார். சசிக்குமார் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது.
அவர் நடித்த படங்களில் சுப்பிரமணியப்புரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன் போன்றவை நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். சமீபத்தில் அவர் நடித்து வெளியான அயோத்தி திரைப்படமும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆரம்பக்கால கட்டங்களில் நடிப்பதை விடவும் படம் இயக்குவதன் மீதுதான் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் சசிக்குமார். தனது உறவினர் மூலமாக முதன் முதலாக இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் சசிக்குமார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் பாலாவிடம் பணிப்புரிவது கடினம் என்ற பேச்சு உண்டு.
இந்த நிலையில் சசிக்குமாருக்கு முதல் படமே பாலாவுடன் அமைந்தது. அப்போது சேது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. நடிகர் விக்ரமும் அந்த படத்திற்காக வெகு காலமாக காத்திருந்தார். இதனால் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக சேது பார்க்கப்பட்டது.
சசிக்குமார் அனுபவித்த சங்கடங்கள்:
அந்த படத்தில் ஒரு கடைநிலை உதவி இயக்குனராகதான் சசிக்குமார் இருந்தார். எனவே கடைகளுக்கு சென்று டீ வாங்கி வருவது, சாப்பாடு வாங்கி வருவது போன்ற வேலைகளை சசிக்குமார் செய்து வந்தார். இப்படி இருக்கும்போது ஒருமுறை சசிக்குமாரை அழைத்த பாலா “போய் நடிகரை அழைத்து வா” என கூறியுள்ளார்.
சசிக்குமாரும் நடந்து சென்றுள்ளார். அதை பார்த்து கோபமான பாலா “என்ன நடந்து போயிட்டு இருக்க. இப்படி இருந்தா எப்படி உதவி இயக்குனரா உன்னை வச்சிக்க முடியும்? ஓடி போய் கூட்டிட்டு வர்றது இல்லையா?” என கூறியுள்ளார். அதிலிருந்து எந்த வேலையாக இருந்தாலும் அதை ஓடி போய்தான் செய்வாராம் சசிக்குமார். இப்போதுவரை அது அப்படியே தொடர்கிறது என சசி பேட்டியில் கூறியுள்ளார்.