சத்யராஜ் இடம்பெற்ற காட்சிகளை நீக்கச் சொன்ன ரஜினிகாந்த்…? ஓஹோ இதுதான் விஷயமா!
பல ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நதி நீர் பிரச்சனைக்காக தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் போராட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது அந்த மேடையில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும்போது அவரின் முன்பாகவே அவரை குறித்து மறைமுகமாக மிக கடுமையாக விமர்சித்திருந்தார் சத்யராஜ்.
எனினும் அதன் பின் பல பேட்டிகளில் தான் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசவில்லை எனவும் கூறிவந்தார் சத்யராஜ். இவ்வாறு ரஜினிகாந்த்துக்கும் சத்யராஜ்ஜுக்கும் இடையே அவ்வப்போது பனிப்போர் மூண்டுக்கொண்டே இருக்கும் என சினிமா துறையினர் பலரும் கூறுவதுண்டு.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்த “மிஸ்டர் பாரத்” திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது ஏற்பட்ட ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“மிஸ்டர் பாரத்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், ரஜினிகாந்த்துக்கு அத்திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார். அப்போது அத்திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், “என்னை விட சத்யராஜ் மிகவும் பயங்கரமாக ஸ்கோர் செய்துவிடுவார் போல இருக்குதே. பிரமாதமா நடிச்சிருக்காரே” என பாராட்டினாராம்.
எனினும் அத்திரைப்படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீள்வதால், அத்திரைப்படத்தை 2.30 மணி நேரத்திற்குள் சுருக்கிட எஸ்.பி.முத்துராமன் முடிவு செய்தாராம். ஆதலால் சத்யராஜ் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கிவிட்டாராம்.
இதை கேள்விப்பட்ட சத்யராஜ் “ஏன் சார் என்னுடைய காட்சிகளை நீக்கிட்டீங்க?” என கேட்டிருக்கிறார். அதற்கு எஸ்.பி.முத்துராமன் “ஹீரோவோட காட்சிகளை கட் செய்ய முடியாது. நீங்கள் நடித்த சில காட்சிகள் கதைக்கு வேண்டியதாக இல்லை. ஆதலால் சில காட்சிகளை வெட்டிவிட்டேன்” என கூறியிருக்கிறார்.
ஆனால் சத்யராஜ்ஜோ, ரஜினிகாந்த்தான் தனது காட்சிகளை கத்திரி போட சொல்லியிருக்கிறார் என தனக்கு தானே நினைத்துக்கொண்டாராம். அதில் இருந்து ரஜினிகாந்தின் மேல் சத்யராஜ்ஜுக்கு வெறுப்பு உண்டாகத் தொடங்கியதாம்.