நான்தான் நடிச்சேன்!..ஆனா எனக்கு பிடிக்காது!.. நம்ம சத்தியராஜ் சொல்றத கேளுங்க!..
சில திரைப்படங்களில் சில நடிகர் நடித்திருப்பார்கள். ஆனால், அந்த படத்தின் கதை அவர்களுக்கு பிடித்திருக்காது. ஆனால், சில காரணங்களால் அந்த படங்களில் நடித்திருப்பார்கள். அதேபோல்தான் சில பாடல் காட்சிகளும், வசனங்களும் கூட நடிகர்களுக்கு அமையும். வாய்ப்புகள் இல்லாதபோது அந்த படங்களில் நடித்தேன். இப்போது தொலைக்காட்சியில் நான் நடித்த சில படங்களை பார்க்கும்போது ‘ஏன்டா நடித்தோம்’ என தோன்றும் என அர்ஜூன் உள்ளிட்ட பல நடிகர்கள் பேட்டிகளில் கூறியுள்ளனர். இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
சத்தியராஜ் ஹீரோவாக நடித்த திரைப்படம் வண்டிச்சோலை சின்ராசு. மனோஜ் குமார் இயக்கிய இந்த திரைப்படம் 1994ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சுகன்யா கதாநாயகியாக நடித்திருப்பார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் ‘செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே’ என்கிற பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்த பாடலாகும்.
ஜீன்ஸ் பேண்ட் போட்டு அலையும் கதாநாயகி சுகன்யாவுக்கு புத்திமதி சொல்வது போல் அந்த பாடலில் வரிகள் இடம் பெற்றிருக்கும். அதில், இது போல உடை அணியக்கூடாது, நீச்சல் உடை அணியக்கூடாது, நமது கலாசாரம்தான் முக்கியம் என்பதுபோல் வரிகள் வரும். இந்த பாடல் பற்றி ஒருமுறை கூறிய சத்தியராஜ் ‘நான் நடித்திருந்தாலும் எனக்கு பிடிக்காத பாடல் அது.
ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு பெரியாரிஸ்ட். முற்போக்குவாதி. எனவே, பிற்போக்குத்தனம் கொண்ட அந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால்,சம்பளம் வாங்கிவிட்டால் நடிக்க வேண்டியது என் கடமை என்பதால் நடித்தேன். மற்றபடி அந்த பாடல்வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏஆர்.ரகுமான் மீதுள்ள கோபத்தை பாட்டுல காட்டுனாரா?.. இயக்குனரை பீதியடையச் செய்த இளையராஜா..