சத்தியராஜ் சொன்ன வசனம்!.. பேச மறுத்த கவுண்டமணி!.. நடிகன் படத்தில் நடந்த கலாட்டா!...

சினிமாவில் சில நடிகர்களின் கூட்டணிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும். அதில் முக்கியமானது கவுண்டமணி - சத்தியராஜ் கூட்டணிதான். பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து லூட்டி அடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். நடிகன், மாமன் மகள்,வேலை கிடைச்சிடுச்சி, வள்ளல், ரிக்ஷாக்காரன், தாய் மாமன் , வில்லாதி வில்லன், பிரம்மா என சொல்லிகோண்டே போகலாம்.
இவர்கள் இருவரும் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துவிடுவார்கள். கவுண்டமணி துவக்கத்தில் செந்திலுடன் இணைந்து காமெடி செய்து வந்தார். பல படங்களில் தனியாகவும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் கவுண்டமணி இருந்தால் படம் வெற்றி என்கிற நிலை உருவானது.

Goundamani
எனவே, ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கினார் கவுண்டமணி. நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கும், கவுண்டமணிக்கும் ஒரே சம்பளம் என்பது பலருக்கும் தெரியாது. ஹீரோவுக்கு இணையான சம்பளம் மட்டுமில்லை, படம் முழுக்க ஹீரோவுடன் வலம் வரும் வேடம் கேட்டார் சத்தியராஜ். அப்படித்தான் சத்தியராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பலரின் படங்களிலும் நடித்தார்.
பி.வாசு இயக்கத்தில் சத்தியராஜ், குஷ்பு நடித்து வெளியான படம் நடிகன். இந்த படத்தில் கவுண்டமணியும், சத்தியராஜும் சேர்ந்து அடித்த லூட்டிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சத்தியராஜின் அறையில் கவுண்டமணி நுழைந்து அவரின் சாப்பாட்டை சாப்பிடும் போதும், அவர் கொடுத்த காசில் கோட் சூட் வாங்கி போட்டுகொண்டு அவரின் சித்தப்பா மகன் என மனோரமாவிடம் சொல்லி வீட்டில் நுழையும் போது நடக்கும் காமெடிகளை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
இந்த படத்தில் பாட்டு வாத்தியார் மற்றும் அவரின் அண்ணன் மகன் என 2 வேடங்களில் நடித்து மனோரம்மாவிடம் பித்தலாட்டம் செய்வார் சத்தியராஜ். குஷ்புவை பெண் பார்க்க வரும்போது பயங்கராமாக பம்முவார் சத்தியாராஜ். அப்போது கவுண்டமணி அடிக்கும் கமெண்ட்டுகள் தியேட்டரில் விசில் பறக்கும்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் அந்த காட்சி பற்றி பேசிய சத்தியராஜ் ‘கவுண்டமனி அண்ணனுக்கு பல வசனங்களை நான் சொல்வேன். நீ இந்த பொண்ண இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல!.. இது உலக மகா நடிப்புடா சாமி. மொள்ளமாரி, கேப்மாரி இவனுங்களெல்லாம் தனித்தனியாத்தான் பாத்திருக்கிறேன். நீ எல்லா சேர்ந்த ஒருத்தன்’ என்கிற வசனத்தை நான்தான் பேச சொன்னேன். ‘நீ இந்த படத்தோட ஹீரோ. உன்ன எப்படி நான் அப்படி சொல்லுவேன்’ என மறுத்தார் கவுண்டமணி. ‘அது என் நடிப்பை பாராட்டி நீங்கள் பேசும் வசனம்’ என சொன்ன பிறகே கவுண்டமணி அந்த வசனத்தை பேசினார்’ என சொல்லி இருக்கிறார் சத்தியராஜ்.