வீட்டுச்சிறையில் தள்ளப்பட்ட சாவித்திரி… புயலை அனுப்பி காதலனுடன் சேர்த்து வைத்த கடவுள்??
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான சாவித்திரி, நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட செய்தியும், அதன் பின் இருவரின் உறவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டு பிரிந்த செய்தியும், அதனை தொடர்ந்து தனது கடைசி காலத்தில் சாவித்திரி துயர நிலைக்குச் சென்றது குறித்தும் நாம் அனைவரும் அறிவோம்.
சாவித்திரி, ஜெமினி கணேசனை காதலிக்கத் தொடங்கியபோது ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருந்தது. ஆதலால் சாவித்திரியின் மாமாவான வெங்கடராமய்யா சௌத்ரி இந்த காதலை ஏற்கவில்லை. அதனை தொடர்ந்து சாவித்திரி, ஜெமினி கணேசனை பார்க்கக்கூடாது என்பதற்காக, பல கட்டுப்பாடுகளை விதித்தார் சௌத்ரி. ஆனால் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி படப்பிடிப்பை காரணம் காட்டி இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஜெமினியும் சாவித்திரியும் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. இது போன்ற செய்திகள் வெளிவந்த பிறகு சாவித்திரியையும் ஜெமினி கணேசனையும் கண்காணிக்க பலரையும் நியமித்தார் சௌத்ரி.
இதனிடையே சௌத்ரி, ஒரு நாள் தனது சொந்த வேலை காரணமாக ஆந்திராவிற்கு சென்றிருந்தார். அந்த நாட்களில் ஜெமினி கணேசனுடன் ஊர் சுற்றத் தொடங்கினார் சாவித்திரி. மேலும் ஜெமினி கணேசன் சாவித்திரியின் வீட்டிற்கே வந்து அடிக்கடி சந்தித்தார்.
இதையும் படிங்க: “உங்க ஆதரவு எனக்கு தேவையில்லை”… எம்.ஜி.ஆரின் முகத்திற்கு நேராகவே கொந்தளித்துப் பேசிய வாலி…
இதனை கேள்விப்பட்ட சௌத்ரி, சாவித்திரியை அவரது அறையில் வைத்து பூட்டிவிட்டார். மேலும் சாவித்திரி இனிமேல் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டார். அந்த நாட்களில் சென்னையில் புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது.
அப்போது அடித்த பலத்த காற்றில், சாவித்திரியின் அறை தானாகவே திறந்துகொண்டதாம். அந்த கடவுள்தான் புயலை அனுப்பியிருக்கிறார் என்று நினைத்த சாவித்திரி, உடனே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். அந்த நேரத்தில் புயலால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆதலால் அந்த இருட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறினார் சாவித்திரி.
வெளியே பேய் மழை பெய்துகொண்டிருக்க, சாவித்திரி ரோட்டில் இறங்கி ஓடத்துவங்கினார். சிறிது நேரத்தில் ஜெமினி கணேசனின் வீட்டிற்குப் போய் சேர்ந்தார் சாவித்திரி. அங்கே கதவை தட்டியபோது ஜெமினி கணேசனின் முதல் மனைவி கதவை திறந்திருக்கிறார்.
ஜெமினி கணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழகி வரும் விஷயம் அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் அவர் சாவித்திரியை விரட்டிவிடவில்லை. சாவித்திரியை வீட்டிற்குள் அழைத்து ஈரமான தலையை துவட்டிக்கொள்வதற்காக துண்டையும் கொடுத்தார். அப்போது படுக்கையறையில் இருந்து வெளியே வந்த ஜெமினி கணேசன், தனது மனைவி சாவித்திரியை உபசரிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனாராம்.