Connect with us

Cinema History

சாவித்திரியை கண்டபடி திட்டிய கண்ணதாசன்… போண்டியாகும் வேளையில் படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்… அடப்பாவமே!!

1963 ஆம் ஆண்டு தனது உறவினரான பஞ்சு அருணாச்சலத்தின் பெயரில் “இரத்தத்திலகம்”என்ற  திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார் கண்ணதாசன். அத்திரைப்படத்தில் சிவாஜி, சாவித்திரி ஆகியோரை ஒப்பந்தம் செய்தார் கண்ணதாசன். இத்திரைப்படத்தை தாதா மிராசி இயக்குவதாக முடிவுசெய்யப்பட்டது.

“இரத்தத்திலகம்” திரைப்படத்தின் படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என கண்ணதாசன் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே பல திரைப்படங்களை தயாரித்து வந்த கண்ணதாசனுக்கு தோல்விகளே மிஞ்சியது. ஆதலால் பல கடன்களும் வந்து குவிந்தது. இந்த நிலையில்தான் “இரத்தத்திலகம்” திரைப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க முடிவு செய்தார் கண்ணதாசன்.

“இரத்தத்திலகம்” திரைப்படத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, சாவித்திரி எம் ஜி ஆரின் “பரிசு” திரைப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார். பல நாள் கால்ஷீட் தேதிகளை “பரிசு” திரைப்படத்திற்காக கொடுத்துவிட்டார் சாவித்திரி.

“இரத்தத்திலகம்” திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யா, சாவித்திரியிடம் கால்ஷீட் தேதிகளை கேட்கச்சென்றார். அப்போது சாவித்திரி “என்னை மன்னித்துவிடுங்கள், நான் எல்லா தேதிகளையும் எம் ஜி ஆர் படத்திற்கு தந்துவிட்டேன். எம் ஜி ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இரத்தத்திலகம் திரைப்படத்தில் நடிக்கிறேன்” என கூறியிருக்கிறார்.  வீரய்யா இந்த விஷயத்தை கண்ணதாசனிடம் வந்து கூறியுள்ளார்.

இதனை கேட்ட கண்ணதாசன் பெரும் கோபம் கொண்டார். வீரய்யாவிடம் “சாவித்திரிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள், நான் பேசுகிறேன்” என கூறியிருக்கிறார். சாவித்திரிக்கு தொலைப்பேசியில் அழைத்தபோது சாவித்திரியின் மேனேஜர் எடுத்திருக்கிறார். “அம்மா உள்ள இருக்காங்க. அவங்க வந்ததும் நானே கூப்பிடுறேன்” என கூறி தொலைப்பேசியை வைத்துவிட்டார்.

இதனிடையே வீரய்யாவிடம் கோபத்தில் சாவித்திரியை கண்டபடி திட்டியிருக்கிறார். சில நிமிடங்களில் சாவித்திரியின் மேனேஜர் தொலைப்பேசியில் அழைத்து “சாவித்திரி இதோ லைனில் வந்துகொண்டிருக்கிறார்” என கூறியிருக்கிறார். இதனை வீரய்யா கண்ணதாசனிடம் கூறியிருக்கிறார். ஆனால் கண்ணதாசனுக்கு இது காதில் விழுந்ததா இல்லையா என தெரியவில்லை. தொடர்ந்து சாவித்திரியை திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.

மறுபக்கம் சாவித்திரி லைனில் வந்துவிட்டார். சாவித்திரி லைனில் வந்த விஷயமே தெரியாமல் கண்ணதாசன் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். இதனை மறுபக்கம் தொலைப்பேசியில் சாவித்திரி மௌனமாக கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். சாவித்திரி லைனில் வந்தது கண்ணதாசனுக்கு தெரியாது.

“சாவித்திரி கால்ஷீட் மட்டும் கொடுக்கவில்லை என்றால், படம் எடுத்தவரைக்கும் உள்ள நெகட்டிவ்வை எரித்துவிடுவேன்” என கோபத்தில் கத்தியிருக்கிறார் கண்ணதாசன். இவ்வாறு கண்ணதாசன் திட்டியதை எல்லாம் முழுமையாக கேட்ட சாவித்திரி, தொலைப்பேசியை வைத்துவிட்டார்.

மீண்டும் சாவித்திரிக்கு வீரய்யா தொலைப்பேசியில் தொடர்புகொள்ள சாவித்திரியே தொலைப்பேசியை எடுத்திருக்கிறார். “கவிஞர் பேசியதை எல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். படம் எடுத்தவரைக்கும் உள்ளவற்றை எரித்துவிடுவதாக கூறினாரே. அதனை தாராளமாக செய்யச்சொல்லுங்கள். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என கூறிவிட்டு தொலைப்பேசியை வைத்துவிட்டார் சாவித்திரி.

“நாம் ஏற்கனவே கடனில் இருக்கிறோம். இந்த நிலையில் இத்திரைப்படம் நின்றுபோய் விட்டால் நமக்கு நஷ்டம்தான்” என நினைத்த வீரய்யா, சாவித்திரியிடம் சமாதானமாக போகுமாறு கண்ணதாசனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது நல்ல யோசனைதான் என உணர்ந்த கண்ணதாசன் வீரய்யாவை சமாதானப்படுத்த அனுப்பினார்.

தினமும் சாவித்திரியிடம் பேச முயற்சி செய்துகொண்டிருந்த வீரய்யாவை சாவித்திரி கண்டுகொள்ளவே இல்லை. ஒரு நாள் வீரய்யாவிடம் சாவித்திரி “ஏன் தினமும் என்னை பார்க்க வருகிறீர்கள். உங்களிடம் நான் பேசத்தயாராக இல்லை. நீங்கள் தேவை இல்லாமல் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டார்.

அப்படியும் வீரய்யா விடவில்லை. தினமும் சாவித்திரி, எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் போய் தலையை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு நாள் வீரய்யாவை அருகில் அழைத்த சாவித்திரி “நான் இப்போது என்ன செய்யவேண்டும்”? என கேட்டிருக்கிறார். உடனே வீரய்யா “இந்த படத்தை சீக்கிரம் முடிக்கவில்லை என்றால் கவிஞருக்கு நஷ்டம் ஏற்படும். ஆதலால் நீங்கள் பழசை எல்லாம் மறந்துவிட்டு எங்கள் திரைப்படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதனை கேட்ட சாவித்திரி “சரி, நான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு. எனக்கு சேர வேண்டிய பாக்கித்தொகையை முழுவதுமாக கொடுக்கவேண்டும். மேலும் இந்த படம் சம்பந்தமாக உங்களை தவிர தயாரிப்பு நிறுவனத்தில் இருக்கும் வேறு யாரிடமும் நான் பேசமாட்டேன்” என கூறியிருக்கிறார். இதற்கு சரி என்று ஒப்புக்கொண்டார் வீரய்யா. அதன் பிறகுதான் இத்திரைப்படத்தை சாவித்திரி நடித்துக்கொடுத்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top