‘உள்ளே நுழைந்ததும் விளக்கை அணைக்க சொன்னார்’.. ஹெச்.வினோத் பற்றி பிரபலம் பகிர்ந்த தகவல்..
ஹெச்.வினோத் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான “சதுரங்க வேட்டை” ரசிகர்களை அசரவைக்கும் திரைப்படமாக வெளிவந்தது. மிகவும் வித்தியாசமான மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சதுரங்க வேட்டை” மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
முதல் திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து கார்த்தியை வைத்து “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற மாஸ் ஹிட் திரைப்படத்தை அளித்தார். இத்திரைப்படத்தின் வெற்றி திரையுலகினர் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து “நேர்கொண்ட பார்வை”, “வலிமை”, “துணிவு” ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் தற்போது கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
ஷான் ரோல்டன்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஹெச்.வினோத்தை குறித்த ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஷான் ரோல்டன் “வாயை மூடி பேசவும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் “முண்டாசுப்பட்டி”, “ஜோக்கர்”, “ஜெய் பீம்” உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அதே போல் ஹெச்.வினோத் இயக்கிய முதல் திரைப்படமான “சதுரங்க வேட்டை” திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்தான் இசையமைத்திருந்தார்.
விளக்கை அணைக்கச்சொன்ன ஹெச்.வினோத்
இதனை தொடர்ந்து அப்பேட்டியில் கலந்துகொண்ட ஷான் ரோல்டன் ஹெச். வினோத்தை குறித்து பேசியபோது, “சதுரங்க வேட்டை திரைப்படத்தின் கதையை கூறுவதற்காக என்னுடைய அறைக்கு வந்தார் ஹெச்.வினோத். அப்போது நான் புத்தகம் படிப்பதற்காக ஒரு சின்ன மின் விளக்கை எரியவிட்டிருந்தேன்.
உள்ளே வந்த ஹெச்.வினோத், ‘தலைவா, ரூம்ல உள்ள பெரிய லைட் எல்லாம் கொஞ்சம் அமத்திடுங்க. ஏன்னா நான் இப்போ சொல்ல போற கதைல ஒரு டார்க் இருக்கு’ என சொல்லவிட்டு அந்த கதையை எந்த வித தயக்கமும் இன்று லாவகமாக கூறினார்” என அப்பேட்டியில் ஷான் ரோல்டன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சரோஜாதேவியை அதிமுகவில் சேர்க்க எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரா?.. நடந்தது இதுதான்!…