வேள்பாரியை தொடர்ந்து உடையார் நாவலின் மேல் கண் வைக்கும் பிரபல இயக்குனர்… தமிழ் சினிமா டிரெண்டே மாறப்போகுதோ??
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ரசிகர்களை இத்திரைப்படம் ஈர்த்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் நிரம்பி வழிகின்றன. “பொன்னியின் செல்வன்” வெளியானதில் இருந்து தற்போது வரை உலக அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் சுமார் ரூ. 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1950களில் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை எம் ஜி ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் திரைப்படமாக உருவாக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சிகள் கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த 60 வருட தமிழ்சினிமாவின் கனவை மணிரத்னம் நிஜமாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து எழுத்தாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவலை ஷங்கர் படமாக்க உள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. சேர சோழ பாண்டியர்களான மூவேந்தர்கள் இணைந்து பாரி என்ற மன்னனோடு போர் புரியும் கதைதான் “வேள்பாரி”. மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்ட இந்த நாவல், “பொன்னியின் செல்வன்” நாவலை போலவே மிகவும் பிரபலமானது.
இத்திரைப்படத்தில் சூர்யா பாரியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, தற்போது செல்வராகவன், பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியபோது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புனைவு நாவல்தான் “உடையார்”. இந்த நாவலும் தமிழின் மிக முக்கியமான வரலாற்று புனைவு நாவலாக திகழ்கிறது. தனது சொக்கவைக்கும் எழுத்துக்களால் சோழ தேசத்தையும் அதன் செழிப்பையும், தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்திருப்பார் பாலகுமாரன்.
பாலகுமாரன் “பாட்ஷா”, “நாயகன்”, “குணா” என பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் செல்வராகவன் இயக்கிய “புதுப்பேட்டை” திரைப்படத்திற்கும் பாலகுமாரன்தான் வசனம் எழுதினார். தமிழில் பல நாவல்களை எழுதிய பாலகுமாரன் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் உயிரிழந்தார். இந்த நிலையில்தான் செல்வராகவன் “உடையார்” நாவலை படமாக்க உள்ளார் என தகவல் வருகிறது.
செல்வராகவன் ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளார். இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு ஏங்கிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்போது ஒரு டபுள் போனஸாக இந்த தகவல் அமைந்துள்ளது.
இது போன்று பல சரித்திர நாவல்களை படமாக்க பல இயக்குனர்களும் முயன்று வருகிறார்கள். இந்த உத்வேகத்தை மணிரத்னம் “பொன்னியின் செல்வன்” மூலமாக தொடக்கி வைத்தார் என்று கூறினால் கூட அது மிகையாகாது.