ஹலோ செல்வா!...‘நானே வருவேன்’ அந்த படத்தோட கதையா?!...இது தாணுவுக்கு தெரியுமா?...
பல வருடங்களுக்கு பின் அண்ணன் செல்வராகன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த சில வருடங்கள் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில், தனது தம்பி தனுஷுடன் செல்வராகவன் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது. வழக்கம் போல் செல்வா திரைப்படங்களில் வரும் சைக்கோ கதாபாத்திரம் தனுஷுக்கு என்பது டீசரை பார்க்கும் போது தெரிகிறது. அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். மேலும், அண்ணன் தனுஷ் மற்றும் அவரின் குடும்பத்தை தம்பி தனுஷ் கொல்ல வருவது போல காட்சிகள் டீசரில் இடம் பெற்றிருந்தது.
இது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா?. ஆம். கமல் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தின் கதையும் இதுதான். இதில், என்ன ஆச்சர்யம் என்னவெனில், இந்த படத்தின் தயாரிப்பாளரும் தாணுதான். இப்படத்தின் பட்ஜெட் எகிறி, படமும் ஃபிளாப் ஆகி ‘ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என பேட்டியே கொடுத்தார் தாணு. அந்த படத்திற்கு பின் தாணு - கமல் மீண்டும் இணையவே இல்லை. இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை.
தற்போது அதே தாணு தயாரிப்பில் அதே கதையை செல்வராகவன் இயக்கியுள்ளாரா என்கிற சந்தேகம் டீசரை பார்க்கும் போது நமக்கு எழுகிறது. ஒருவேளை கதையை அவரிடம் கூறாமால் செல்வராகவன் படம் எடுத்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் படம் வெளிவந்தால் தெரிந்துவிடும்.
நானே வருவேன் திரைப்படம் வருகிற 29ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.