2 ஆண்டுகள் நின்று போன படப்பிடிப்பு… பொறுமையை விடாமல் ஜெயித்து காட்டிய சீயான் விக்ரம்… அடேங்கப்பா!!
மிகவும் கடினமாக நடிப்பவரைப் பார்த்து “உயிரைக் கொடுத்து நடிக்கிறாரே” என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள். ஆனால் சீயான் விக்ரம் நிஜமாகவே உயிரை கொடுத்து நடிப்பவர். ஒரு திரைப்படத்திற்காக தன்னையும், தனது உடலையும் வருத்திக்கொண்டு நடிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால் அது விக்ரமிற்கு எளிதான காரியம்தான். இவ்வாறு ஒரு படத்திற்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் அவரால் இறங்க முடிகிறதென்றால் சினிமாவின் மீது அவர் வைத்திருக்கும் வெறியே காரணம்.
சீயான் விக்ரம் தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் அவர் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். அந்த வேளையில்தான் அவருக்கு “சேது” திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
“புது இயக்குனர், ஆனால் வித்தியாசமான கதை. நிச்சயமாக நமது கேரியரை தூக்கிவிடும் படமாக இது இருக்கும்” என்ற நம்பிக்கையில் நடிக்கத் தொடங்கினார் விக்ரம்.
1997 ஆம் ஆண்டு “சேது” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்காக இயக்குனர் பாலா விக்ரமை 21 கிலோ எடை குறைக்கச் சொன்னாராம். விக்ரமும் எடையை குறைத்துவிட்டார்.
ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பொருளாதாரம் காரணமாக நடுவில் நின்றுவிட்டதாம். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல, கிட்டத்தட்ட 2 வருடங்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாம். ஆனால் விக்ரம் தனது நம்பிக்கையை விடவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் விக்ரம் சன் தொலைக்காட்சியில் “சிறகுகள்” என்ற டெலி ஃபிலிம் ஒன்றில் நடித்தார். எனினும் “சேது” திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஒரு வழியாக முடிவடைந்தது. ஆனால் “சேது” திரைப்படத்தை வாங்குவதற்கு எந்த விநியோகஸ்தர்களும் முன் வரவில்லை.
கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிறப்பு காட்சிகள் விநியோகஸ்தர்களுக்கு போடப்பட்டது. சில காட்சிகளை ஏற்பாடு செய்ய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, விக்ரமின் மனைவியும் பண உதவி செய்திருக்கிறார். எனினும் ஒரு வழியாக அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த சித்ரா லட்சுமணனின் உதவியால் “சேது” திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது.
“சேது” திரைப்படத்தின் வெளியீட்டிற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக இத்திரைப்படத்திற்கு வரவேற்பு கூடியது. அதன்பின் பெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதே போல் விக்ரமின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது “சேது” திரைப்படம். இவ்வாறு பல தடைகளைத் தாண்டிதான் “சேது” திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் பாலா, விக்ரம் ஆகியோரின் பொறுமையும் இத்திரைப்படத்தின் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் இந்த வெற்றிக்கு முழு காரணம்.