சினிமால நடிக்கறதுக்காக வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்.... மேடையில் உருகிய இளம் நடிகை....!
இன்று திரையுலகில் சாதித்த பலரும் ஆரம்ப காலத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்தவர்களாகவே இருப்பார்கள். பெற்றோர் சம்மதிக்காமல் வீட்டை விட்டு ஊரைவிட்டு ஓடி வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்கள் பலர் உள்ளனர்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தான் சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்ததாக கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஷாலினி பாண்டே தான்.
நடிகை ஷாலினி தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா, ஜிவி பிரகாஷுடன் 100% காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்க வில்லை. இதனால் தற்போது இவர் பாலிவுட் சினிமாவிற்கு சென்று விட்டார்.
தற்போது ஹிந்தியில் ரன்வீர் சிங்குடன் ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ள ஜெயேஷ்பாய் ஜோர்தார் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் பேசிய ஷாலினி, "என் அப்பா நான் என்ஜினியரிங் படிக்கவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். எனவே நான் அவருக்காக படிக்க தொடங்கினேன்.
ஒருகட்டத்தில் படிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை, இது எனக்கானதல்ல என்பதை உணர்ந்து நடிகையாக வேண்டுமென நான்கு வருடங்களாக அப்பாவை மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் கடைசி வரை அது முடியவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் நடிப்புக்காக வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன். தற்போது என் பெற்றோர் என்னை பற்றி பெருமையாக நினைப்பார்கள்" என கூறியுள்ளார்.