இரண்டு முறை குண்டு வெடிப்பில் இருந்து தப்பித்த இசையமைப்பாளர்... ஒரு மனுஷனுக்கு இப்படி ஒரு கண்டமா?
தமிழ் சினிமாவின் கிளாசிக் இசையமைப்பாளர்களாக திகழ்ந்தவர்கள் சங்கர்-கணேஷ். ஒரு பிரபலமான இசை ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்கள் இவர்கள். அக்காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெமிநி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். இந்த இருவரில் சங்கர் இப்போது நம்மிடையே இல்லை.
இந்த நிலையில் கணேஷ், இரண்டு குண்டு வெடிப்புகளை சந்தித்து உயிரோடு பிழைத்து வந்திருக்கிறார். அது என்ன சம்பவம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி, கணேஷின் இல்லத்திற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை யார் அனுப்பினார் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த பார்சலில் ஒரு டேப் ரிக்கார்டர், கேசட் மற்றும் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில், "இந்த கேசட்டில் ஒரு ட்யூன் இருக்கிறது. அந்த ட்யூனை கேட்டுவிட்டு எனக்கு வாய்ப்பு வழங்குங்கள்" என எழுதியிருந்தது. கணேஷும் அந்த கேசட்டை டேப் ரிக்கார்டரில் போட்டார். பிளே பட்டனை அமுக்கியபோது உள்ளிருந்து வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் அவரின் கைகள் எரிந்துபோனது. மேலும் அவரது கண்களின் ஒன்றில் பார்வை பறிப்போனது. அதன் பின் தொடர் சிகிச்சைகளின் மூலம் மீண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து இரண்டாவதாக ஒரு குண்டு வெடிப்பை சந்தித்தார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரம்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வருகையை ஒட்டிய விழாவில் கணேஷ் பாட்டு கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார். அவர் பாட்டுக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்த மேடையில் இருந்த 50 மீட்டர் தூரத்தில் மனித வெடிகுண்டு வெடித்தது. இதில் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரும் இறந்துபோனார்கள். எனினும் அந்த குண்டு வெடிப்பில் இருந்து கணேஷ் எந்த வித படுகாயமும் இன்று தப்பித்தார். இவ்வாறு இரண்டு முறை குண்டு வெடிப்பை சந்தித்தும் உயிர் பிழைத்திருக்கிறார் கணேஷ்.