பொன்னியின் செல்வனையே மிஞ்சப்போகும் வேள்பாரி… பக்காவா திட்டம் போட்ட ஷங்கர்… அடேங்கப்பா!!
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்று வந்தது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி உருவாக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்திரைப்படத்தின் தாக்கத்தால் பல வரலாற்றுப் புனைவு நாவல்களை திரைப்படமாக்கும் முயற்சியில் தமிழ் சினிமா இயக்குனர்கள் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் செல்வராகவன், பாலகுமாரன் எழுதிய “உடையார்” நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. எனினும் செல்வராகவன் “ஆயிரத்தில் ஒருவன் 2” திரைப்படத்தை இயக்கிய பின்புதான் இது குறித்த பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் முதல் படியாக இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாவலை திரைப்படமாக உருவாக்க உள்ளதாக ஒரு தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் சூர்யா வேள்பாரியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
பாரி என்ற மன்னுடன் சேர, சோழ, பாண்டியரான மூவேந்தர்கள் போரிட்ட வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் “வேள்பாரி”. “பொன்னியின் செல்வன்” நாவலை போலவே “வேள்பாரி” நாவலும் மிகவும் பிரபலமான நாவல். குறிப்பாக இந்த நாவல் வெளிவந்தபோது அதிக பிரதிகள் விற்பனையானது.
இந்த நிலையில் “வேள்பாரி” திரைப்படம் குறித்த ஒரு சூடான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது “வேள்பாரி” திரைப்படம் 3 பாகங்களாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷங்கர் தற்போது “இந்தியன் 2”, “RC 15” ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இத்திரைப்படங்களுக்குப் பிறகு “வேள்பாரி” திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.