விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?!.. ஐயோ பாவம்!…

by சிவா |   ( Updated:2025-04-08 10:49:27  )
kombu seevi
X

Vijayakanth: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் விஜயகாந்த். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். மேலும், ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகில் உள்ள எல்லோருக்கும் பிடித்த நடிகராக விஜயகாந்த் இருந்தார். பல புதிய இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு உண்டு.

விஜயகாந்தால் சினிமாவில் வளர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்பதுதான் விஜயகாந்த் தனது வாழ்நாளில் சம்பாதித்த பெயர். அதனால்தான் அவரின் இறுதி ஊர்வலத்தில் அவ்வளவு பேர் கலந்துகொண்டனர். கமல், ரஜினி கூட உடனடியாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இவரின் மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, சகாப்தம் என்கிற படம் மூலம் அவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் விஜயகாந்த். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அடுத்து மதுர வீரன் என்கிற படத்திலும் நடித்தார். மேலும், தமிழன் என்று சொல் என்கிற படமும் துவங்கப்பட்டது.

இதில் ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்தும் நடிப்பதாக இருந்தது. விஜயகாந்த் கடைசியாக கலந்துகொண்ட ஷூட்டிங் இந்த படத்திற்காகத்தான். ஆனால், விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் படைத்தலைவன் என்கிற படத்திலும் சண்முக பாண்டியன் நடித்தார். ஆனால், இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி என்கிற படம் துவங்கப்பட்டது. இதில், சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு வேகமாக துவங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

முதல் கட்ட படப்பிடிப்பில் சொன்னதை விட அதிக செலவு ஆனதால் கோபமடைந்த தயாரிப்பாளர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து பேசி முடிக்கப்பட்டுவிட்டது. படம் முழுக்க தேனி மாவட்டம் தொடர்புடையது என்றாலும் சில காட்சிகளை சென்னையில் எடுக்கவிருக்கிறார்களாம். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. அவ்வளவு பேரை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்தின் மகன் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story