நீ பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரனுமா?.. லோகேஷ் கனகராஜை கலாய்த்து தள்ளிய விஜய்!
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். வங்கி வேலையை விட்டுவிட்டு மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தை தொடர்ந்து, கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' படமும் ஹிட்டாகி இருந்தது.
கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ் இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் படம் குறித்து பேசியுள்ளார். மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் சாந்தனு நடித்திருந்தார். மாஸ்டர் படத்தில் பார்கவ் கதாபாத்திரம் மிகவும் குறைந்த நேரமே இடம் பெற்றிருந்தது. இதனால் ரசிகர்களின் கிண்டலுக்கு சாந்தனு ஆளானார். இதற்காக லோகேஷ் கனகராஜ், தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாக சாந்தனு கூறியுள்ளார். மேலும் ராவணக் கோட்டம் படத்தின் ரிலீஸ் பணிகள் நடைபெற்று வந்ததால், லோகேஷ் கனகராஜ் இரவு உணவு விருந்துக்காக தனது வீட்டிற்கு அழைத்த போது செல்ல முடியவில்லை என்று சாந்தனு கூறியுள்ளார்.
மேலும் பேசிய நடிகர் சாந்தனு, "சமீபத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற போது விஜய்யிடம் லோகேஷ் கனகராஜ், "அண்ணே சாந்தனு ஓவரா பன்றான்ண்ணா. வீட்டுக்கு கூப்பிட்டா கூட வரமாட்றான்" என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த விஜய், "நீ அவனை கூப்பிட்டு பண்ண வேலைக்கு உன் வீட்டுக்கு வேற வரனுமா?" என ஜாலியாக லோகேஷ் கனகராஜிடம் விஜய் தெரிவித்ததாக சாந்தனு கூறியுள்ளார்.