சித்தார்த்தை நடிகனாக்கியது ஷங்கர் இல்லையா? பல ஆண்டுகள் கழித்து வெளியான ஆச்சரிய தகவல்…
நடிகர் சித்தார்த், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சித்தார்த்திற்கு சினிமாவில் இயக்குனராக ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்திருக்கிறது. அவர் அந்த சமயத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். மணிரத்னம் இயக்கிய “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் கூட சித்தார்த் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து ஷங்கரின் “பாஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “ஆய்த எழுத்து”, “180”, “காதலில் சொதப்புவது எப்படி?”, “உதயம் என் ஹெச் 4”, “தீயா வேலை செய்யனும் குமாரு”, “ஜிகர்தண்டா” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த்.
தற்போது “டக்கர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. மேலும் கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படத்திலும் சித்தார்த் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சித்தார்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வசனக்கர்த்தாவாகவும் தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கிய எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் சுஜாதா. இவரது உண்மையான பெயர் ரங்கராஜன். இவர் தனது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரை பயன்படுத்தி பல நாவல்களை எழுதியுள்ளார். அந்த நாவல்களில் பல திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. அதே போல் சுஜாதா மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களிடம் வசனக்கர்த்தாவாகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் ஷங்கர் “பாய்ஸ்” திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருந்தபோது எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி அவரிடம் மணிரத்னத்தின் உதவியாளராக இருக்கும் சித்தார்த்தை ஹீரோவாக நடிக்க வைக்கலாமே என கூறியிருக்கிறார். உடனே ஷங்கர் சித்தார்த்தை அழைத்து, “என்னுடைய படத்தில் நடிக்கிறாயா?” என கேட்டிருக்கிறார். அதற்கு சித்தார்த், “எனக்கு டைரக்டர் ஆகனும்ன்னுதான் ஆசை” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஷங்கர், “ஒரு நாள் சும்மா வா, ஃபோட்டோஷூட் எடுத்து பார்க்கலாம்” என கூறியிருக்கிறார். மணிரத்னமும் “ஷங்கர் மாதிரி பெரிய இயக்குனர் கூப்புடுறாருல. போய்ட்டு வா” என கூறி அனுப்பி வைத்தாராம். அதன் பின் ஃபோட்டோஷூட் நடத்திய பிறகு சித்தார்த்தை ஷங்கருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இவர்தான் ஹீரோ என முடிவெடுத்துவிட்டாராம். அவ்வாறுதான் சித்தார்த் “பாய்ஸ்” திரைப்படத்தில் ஹீரோவாக ஆகியிருக்கிறார்.
இதையும் படிங்க: கூப்பிட்டு வச்சு அடிச்சாங்க! வடிவேலுவை இமிடேட் செய்த நடிகருக்கு நடந்த கொடூரம்