அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்காங்க! தனுஷ் - சிம்பு இவங்களோட ஒரே கோல்

simbu
Dhanush - Simbu: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என இரட்டை அரங்கலாக எப்படி போட்டி போட்டு இருந்தார்களோ அதே போல அடுத்த ஒரு காம்போ என்றால் அது தனுஷ் சிம்பு. இவர்களுடைய ரசிகர்கள் விஜய் அஜித் ரேஞ்சில் தனுஷையும் சிம்புவையும் வைத்து பார்க்கிறார்கள். தனுஷுக்கு போட்டி சிம்பு என்றும் சிம்புவுக்கு போட்டி தனுஷ் என்றும் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஒரு போட்டியை உருவாக்கி விட்டார்கள். இடையில் இருவருக்கும் சில பல கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் அவர்களுடைய ரசிகர்களே சண்டையிட்டு கொள்வதையும் நாம் பார்க்க முடிந்தது.
இதற்கு இடையில் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் தான் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அது இரு ரசிகர்களுக்குமே ஒரு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அதுமட்டுமல்ல மேடையிலும் இருவரும் பேசும் பொழுது வெளியில் தான் எங்களை பற்றி தவறாக பேசுகிறார்கள். ஆனால் நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான் என்பதைப் போல பல விதங்களில் இவர்களுடைய நட்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் தனுசுக்கும் சிம்புக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்ன என்பது பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இருவருமே சமகாலத்து நடிகர்கள் என்றாலும் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே இந்த சினிமாவில் கால் பதித்தவர். இருந்தாலும் ஒரே மாதிரியான மார்க்கெட் அளவே தான் இருவரும் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் பெரும்பாலும் தான்தான் பெரியவன் தான்தான் சூப்பர் ஹீரோ அடுத்தவன் வளரக்கூடாது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால் இவர்களை பொறுத்த வரைக்கும் இவர்களுடைய ஒரே குறிக்கோள் தனக்கு அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறை நடிகர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டும் என்பதைத்தான் இருவருமே யோசிக்கிறார்கள்.
அதைப்பற்றிய ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. தனுஷின் ஒரு பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலாவி வருகின்றது. மூணு படத்தின் மூலமாகத்தான் உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தை முதன் முதலில் உருவாக்கினார் தனுஷ். அந்த பேட்டியில் அவர் கூறும் பொழுது உண்டர் பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய நோக்கமே இளம் தலைமுறை நடிகர்களை உருவாக்குவது. திறமை யாரிடத்தில் இருக்கிறதோ அவர்களை வெளிக்கொண்டு வந்து இந்த தமிழ் சினிமாவில் அவர்களை நல்ல ஒரு இடத்தில் உட்கார வைக்க வேண்டும்.
அதுதான் இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில் வந்தவர்கள் தான் அனிருத் சிவகார்த்திகேயன். இதற்கும் அடுத்து நிறைய இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒவ்வொன்றாக இந்த நிறுவனத்தின் மூலம் நான் வெளியே கொண்டு வர வேண்டும் என்று அந்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல சிம்புவின் ரீசண்டான ஒரு வீடியோவை ஹரிஷ் கல்யாண் பகிர்ந்திருந்தார். அப்போது விகடன் மேடையில் ஹரிஷ் கல்யானை புகழ்ந்து பேசும்போது சிம்பு கூறிய ஒரு தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .

ஹரிஷ் கல்யானை நான் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் அவர் தேர்ந்தெடுக்கும் விதமும் சினிமா மீதும் நடிப்பின் மீதும் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன. ஒருத்தருடைய கிராப் என்பது ஏறியும் இறங்கியும் இருக்கக்கூடாது. ஒரே நேர்முகமாகத்தான் இருக்க வேண்டும் அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் கிராஃபும் அப்படித்தான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டே இருக்கிறார். இன்னும் அவர் முன்னேற வேண்டும். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .அடுத்த தலைமுறை நடிகர்கள் அடுத்தடுத்து வளர வேண்டும் என்றும் சிம்பு கூறி இருந்தார். இந்த இரண்டு வீடியோவும் பார்க்கும் பொழுது தனுஷும் சிம்புவும் அவர்களைப் பற்றி இல்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள் என்பதை தெளிவு படுத்துகின்றன.