சீறிப்பாய்ந்த சிம்பு இப்போ அடக்கி வாசிக்கிறது எதுக்காகத் தெரியுமா?? அவரே சொல்றார் பாருங்க…
பத்து தல
சிம்பு நடிப்பில் வருகிற 30 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “பத்து தல”. இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நேற்று இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிம்பு ரசிகர்களால் அரங்கமே கடல் போல் திரண்டிருந்தது.
சிம்புவின் கேரியரே குளோஸ்…
சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் இருந்து ஒதுங்கவேண்டும் என்று முடிவெடுத்து ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்தி வந்தார். அந்த சமயத்தில் அவர் மீது பல புகார்கள் எழுந்தன. படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங் பேச ஒத்துழைக்கவில்லை எனவும் பல தயாரிப்பாளர்கள் அவர் மீது விமர்சனங்களை வைத்தனர். மேலும் சிம்புவின் கேரியரே குளோஸ் என்று பல பத்திரிக்கைகள் எழுதின. அதே போல் சிம்புவின் உடல் எடையும் கூடிப்போனது.
எனினும் தனது உடல் எடையை குறைத்து மீன்டும் பழைய சிம்புவாக அவதாரம் எடுத்தார். “மாநாடு” திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் ரசிகர்கள் அசந்துப்போகும் விதமாக தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது “பத்து தல” திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று சிம்பு “பத்து தல” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தனது ரசிகர்களை அசரவைக்கும் விதமாக மிகவும் உணர்ச்சி பொங்க பல விஷயங்களை பேசினார்.
சிம்புவோட கதை முடிஞ்சுப்போச்சுன்னு சொன்னாங்க…
“எல்லாரும் என்னிடம் என்ன கேட்கிறார்கள் என்றால், ‘நீங்க முந்தி எல்லாம் ரொம்ப ஃபயரா பேசுவீங்க, பயங்கரமா பேசுவீங்க, ஆனால் இப்போ ரொம்பவும் Soft ஆ பேசுறீங்க?’ என கேட்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது நான் அப்போதெல்லாம் கஷ்டத்தில் இருந்தேன். அப்போது எதுவும் எனக்கு சரியாக இல்லை. தட்டிக்கொடுக்க யாருமே இல்லை, என்ன செய்வதென்று தெரியவில்லை.
‘சிம்பு சினிமாவிலே இனி இருக்க மாட்டார், இவர் கதை முடிஞ்சிப்போச்சு’ என சொன்னார்கள். அந்த நேரத்தில் எனது கஷ்டங்களை எப்படி வெளியே காட்டிக்கொள்ள முடியும். நான்தானே எனக்கு துணையாக நிற்க முடியும். அதனால்தான் அன்று அப்படி பயங்கரமாக பேசினேன். அன்று என்னைத் தட்டிக்கொடுக்க எனது ரசிகர்களை தவிர வேறு யார் என் கூட இருந்தார்கள்?
அப்படி நான் கத்தி பேசும்போது, ‘நீ வந்துருவடா நீ வந்துருவ’ என எனக்கு நானே நம்பிக்கை சொல்லிக்கொண்டேன். அதனால்தான் என்னால் 39 கிலோ குறைக்கமுடிந்தது. ஆனால் அதன் பிறகு மாநாடு படம் வெளியானபோது அந்த படத்தை வெற்றிப்படமாக்கி எனது கண்ணீரை துடைத்தீர்கள். அதன் பின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் எனது நடிப்பை பாராட்டி, இன்று இந்த பத்து தல படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் என்னை வந்து நிறுத்திருக்கிறீர்கள் என்றால், எப்படி உங்களிடம் கத்தி பேசமுடியும். என்னால் பணிந்துதான் பேச முடியும்” என மிகவும் உணர்ச்சிபொங்க பேசியிருந்தார். சிம்புவின் இந்த பேச்சால் ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர்.
இதையும் படிங்க: வைரமுத்துவா? இளையராஜாவா?… பாரதிராஜா சந்தித்த தர்மசங்கட நிலை…