சிம்புவின் மிரட்டல் நடிப்பு… தரமான கேங்க்ஸ்டர் படம்.. வெந்து தணிந்தது காடு விமர்சனம் இதோ…

by Arun Prasad |   ( Updated:2022-09-15 13:46:44  )
சிம்புவின் மிரட்டல் நடிப்பு… தரமான கேங்க்ஸ்டர் படம்.. வெந்து தணிந்தது காடு விமர்சனம் இதோ…
X

சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “வெந்து தணிந்தது காடு” முதல் பாகம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

படத்தின் கதை:

திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு. ஒரு நாள் சிம்பு வயலில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டுவிடுகிறது. அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார் சிம்பு.

எனினும் இது சிம்புவின் தாயாருக்கு (ராதிகா) பயத்தை உண்டு செய்கிறது. சிம்புவை எப்படியாவது வேறு வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என துடிக்கிறார் ராதிகா.

திடீரென ராதிகாவின் உறவினர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள அந்த உறவினர் வேலை பார்த்த மும்பைக்குப் போகிறார். அங்கு ஒரு புரோட்டா கடையில் சிம்பு வேலைக்குச் சேர்கிறார். அங்கே வேலை செய்யும் சிம்பு ஒரு கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கேங்கஸ்டர் கும்பலுடன் இணைகிறார். அந்த கேங்கஸ்டர் கும்பலுடன் பயணிக்கும் சிம்புவிற்கு இறுதியில் என்ன ஆனது என்பது தான் கதை.

படத்தின் பிளஸ்கள்:

“கோவில்”, “தொட்டி ஜெயா”, போன்ற திரைப்படங்களில் பார்த்த அந்த இளம் சிம்புவை மீண்டும் நம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் சிலம்பரசன். முத்து என்ற கதாப்பாத்திரத்தில் முழு படத்தையும் சிம்புவே தாங்கிக்கொண்டு வருகிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் ஒரு சாதாரண அப்பாவி இளைஞனாக யதார்த்தமான நடிப்பில் நம்மை அசரவைக்கிறார். அதன் பின் அவர் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.

சாப்பாட்டிற்கே வழி இல்லாத ஏழை போன்ற உடலமைப்பை தன்னுடைய அயராத உழைப்பால் கொண்டு வந்திருக்கிறார் சிம்பு. இவ்வாறு படம் நெடுக தனது உச்ச நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

பாவை என்ற கதாப்பாத்திரத்தில் வரும் கதாநாயகி சித்தி இத்னானி, தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவுக்கு தாயாக வரும் ராதிகா இயல்பான அம்மா கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்த அனைவரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு உயிராக இருக்கிறது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சித்தார்த்தா நூனியின் ஒளிப்பதிவு கண்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங் பக்கா. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான அசரவைக்கும் திரைக்கதையில் ஆடியன்ஸை சீட் நுனியில் உட்காரவைக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். ஜெயமோகனின் வசனங்கள் நச். இரண்டாம் பாகத்திற்கான லீட் ரசிக்கும்படியாக இருக்கிறது.

படத்தின் மைனஸ்:

முதல் பாதியில் திரைக்கதை ஓட்டம் ஆமை போல் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியிருக்கிறது. கௌதம் மேனன் திரைப்படங்களில் காதல் காட்சிகள் எப்போதும் சிறப்பாக இருக்கும். ஆனால் இதில் காதல் காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு கொஞ்சம் தடையாக அமைந்திருக்கிறது.

முதல் பாதியின் ஆமை வேகத்தை கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சிறப்பான விருந்து இந்த “வெந்து தணிந்தது காடு 1”

Next Story