“நாய் சேகர் ஓடாதுன்னு எப்பவோ தெரியும்”… வடிவேலுவை அட்டாக் செய்யும் பிரபல காமெடி நடிகர்…
வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்து வந்தன. கடந்த 2011 ஆம் ஆன்டு தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு ஈடுபட்டபோது திமுகவுக்கு ஆதரவாக பேசி, விஜயகாந்த்தையும் அதிமுகவையும் மிக கடுமையாக விமர்சித்து வந்தார்.
அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து வடிவேலு சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்பட்ட காரணத்தால் அத்திரைப்படம் நின்றுபோனது.
அதனை தொடர்ந்து “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு ஒத்துழைப்பு தராததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக புகார் அளித்தார். அப்புகாரை தொடர்ந்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது.
கடந்த ஆண்டு வடிவேலு மீதான தடை நீங்கியபிறகு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2”, “மாமன்னன்” ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இதில் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், படத்தில் காமெடி சரியில்லை என பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரான சிங்கமுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது “நாய் சேகர் படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் நாய் சேகர் படத்தை பார்த்தவர்களின் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர் “இந்த படம் வெளிவந்தால் இங்கிருக்கும் காமெடியன்கள் எல்லாம் ஒழிந்துபோவார்கள் என வடிவேலு கூறினார். நான் போன மாதமே சொன்னேன். இந்த படம் ஓடாது என்று. வடிவேலு தன்னுடன் நடித்த சக காமெடி நடிகர்களை எல்லாம் மாற்றிவிட்டார். பத்து பேர் சேர்ந்து ஒரு தேரை இழுக்கவேண்டும். தனியாக இழுத்தால் எங்கயாவது சுளுக்கு பிடித்துவிடும்” எனவும் அப்பேட்டியில் வடிவேலுவை விமர்சித்திருக்கிறார்.
வடிவேலுவும் சிங்கமுத்துவும் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கின்றனர். எனினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நில தகராறில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.