காந்தக் குரல் ஜென்ஸியின் காலம் கடந்தும் ஒலிக்கும் அற்புதமான காதல் பாடல்கள்

சில பாடல்களைக் கேட்கும் போது நம் பருவ வயது கால நினைவுகள் துள்ளித்திரியும். படபடவென பட்டாம்பூச்சியாய் சிறகை விரித்துப் பறக்கும். மின்னல் என ஒரு வெட்டு வெட்டி வெளிச்சக்கீற்றை மனதின் சங்கீத அறைக்குள் ஒளித்து விட்டுச்செல்லும்.

அந்த வகையில் இனிய இசையைத் தரும் இளையராஜாவின் பாடல்களுக்கு உயிரூட்டும் அழகியல் கலந்த மெல்லிய குரலுக்குச் சொந்தக்காரி தான் இந்தப் பாடகி ஜென்ஸி. அவரது வாழ்க்கைப் பயணத்தில் தமிழ்த்திரை உலகில் தடம்பதித்த அந்த சில முத்தானப் பாடல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் உள்ளங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்களை வரிசைப்படுத்தியிருப்பார்கள். அதில் தவறாமல் இடம்பிடிப்பது இந்தப் பாடல் தான். இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு குற்றால அருவியில் குளித்தது போன்ற புத்துணர்ச்சி ஏற்படும்.

தமிழ்சினிமாவில் மறைந்த சுதாகரின் மறக்கமுடியாத காதல் காவியம். படத்தின் பெயர் நிறம் மாறாத பூக்கள். இளையராஜாவின் அற்புத படைப்புகளில் இதுவும் ஒன்று. மனதில் இனிமையான நினைவுகளை என்றென்றும் சுமக்கச் செய்யும் பாடல் இது.

இந்தப் பாடலின் இசையைக் கேட்கும்போது நொடிப்பொழுதில் எவ்வளவு கனத்த சூழ்நிலையாக இருந்தாலும், மனநிலை இருந்தாலும் அதை எளிதில் மாற்றிவிடும் இயல்புடையது இந்தப் பாடல்.

இளையராஜாவின் இசையில் பறவைகள் மட்டுமா பறந்தன? நம் நினைவுகளும் அல்லவா காற்றில் பறந்தன என்று சொல்லும் அளவிற்கு சரணங்களுக்கு இடையே ஒலிக்கும் அந்த இசை ஒலியின் சுருதியை படிப்படியாக உயர்த்தி ஒலிக்கச் செய்து அப்படி ஒரு இசையை அனுபவிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அது ஒரு அற்புதமான அனுபவம். இசையுலகின் உன்னதமான படைப்பு இந்தப் பாடல். ராதிகாவின் மழலை குறையாத குரல் நயத்தோடு ஒலிக்கும் ஜென்ஸியின் இனிமை...சின்னசாமியின் வளமான கற்பனை...இளையராஜாவின் ஒலி நயத்தில் முழுமையாகிறது என்று சொன்னால் மிகையில்லை.

அந்தக் காலத்து அழகிய நினைவுகளைத் தூண்டி விட்டு மெல்ல மெல்ல இசையால் வருடி விடும் அற்புதமான பாடல் இது. கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளில் இளையராஜாவின் இன்னிசையில், மயக்கும் ஜென்சியின் தேன் கலந்த குரலில், பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான அழகியலைச் சுமந்து வந்த அற்புதமான படைப்பு.

இருபறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன...இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன....என்ன ஒரு அழகான வரிகள் என்று நம் விழிகளை வியக்க வைக்கின்றன.

Niram maratha Pookkal

ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்...காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ...நெருங்கி வந்து சொல்லுங்கள்....என்ற பாடல் மனதை மயக்கும் ரகம். இந்தப் பாடலிலும் ஜென்ஸியின் காந்தக் குரல் தான் கம்பீரமாக ஆட்சி செய்கிறது.

ஜென்ஸி, எஸ்.பி.சைலஜா, மலேசியா வாசுதேவன் என்ற 3 அற்புதக் குரல்களின் சங்கமம் தான் இந்தப் பாடல். வெறும் இசைக் கருவிகளின் தொகுப்பாக மட்டுமல் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல். கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரல் ஜென்ஸியின் ஹம்மிங்.

jensi2

சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றைப் போல மனதின் பல்வேறு உணர்வுகளைத் திரட்டிக் கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்தி விடும்.

இந்தப்பாடலில் வரும் மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமோ என்னும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவு செய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சி அடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுப்பூர்வமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி.

என் பாட்டும் உன் பாட்டும் எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து கவனித்தால் மிகக் குறுகிய இடைவெளிக்குப் பின் ஒன்றல்லவா என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிப்பது தெளிவாகக் கேட்கும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் கூட அவர்களின் விழியோரம் நீர் கசியும்.

அதே போல் பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்தில் வரும் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே என்ற பாடலில் ஜென்ஸியின் அற்புதக் குரல் நம்மைக் கட்டிப் போட்டு விடும். எத்தனை ஆயிரம் முறைக் கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் தான் இது.

புதிய வார்ப்புகள் படத்தில் வரும் தம் தன நம் தன தாளம் வரும் பாடல், கரும்புவில் படத்தில் வரும் மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான், ஜானி படத்தில் என் வானிலே பாடல் என இவரது எல்லாப் பாடல்களுமே தேன் சிந்தும் ரகங்கள் தான்.

ப்ரியா படத்தில் என்னுயிர் நீதானே, உல்லாசப் பறவைகள் படத்தில் தெய்வீக ராகம், முள்ளும் மலரும் படத்தில் அடி பெண்ணே, அலைகள் ஓய்வதில்லை படத்தில் காதல் ஓவியம் என்ற பாடல்களை எல்லாம் இப்போது கேட்டாலும் அதை இடையில் நிறுத்த நம் மனம் இடம் கொடுக்காது.

இவரது முழுப்பெயர் ஜென்சி அந்தோணி. கேரளாவைச் சேர்ந்த இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமா உலகிற்கு முழுக்குப் போட்டு விட்டார். 1978 முதல் 1982 வரை தமிழ்சினிமா உலகில் பல மறக்க முடியாத மெல்லிய சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டார் இந்த தேன் குரல் ராணி ஜென்ஸி.

Related Articles
Next Story
Share it