யாரது....சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...? நெஞ்சை விட்டு அகலாத நினைவுகளுடன் சென்ற பாடகி வாணி ஜெயராமின் நினைவலைகள்
இசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகிகள் பலர் உண்டு. என்றாலும் அவர்களில் ஒரு சிலர் தான் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிப்பர். அதற்குக் காரணம் மனதை மயக்கும் குரல் தான். பாடலிலும் அந்த இனிய ராகத்திலும் நம்மிடம் நம்மை அறியாமலேயே நமது மனம் அந்த குரல்வசம் சரணடைந்து விடும்.
அப்படிப்பட்ட அற்புதமான பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த பாடகி வாணிஜெயராம். 80களில் இவரது பாடல்கள் ஒலிக்காத வானொலி நிலையங்களே இல்லை எனச் சொல்லலாம். இப்போது கூட இவரது பாடல்களைக் கேட்கும்போது நம்மால் அதைக் கடந்து செல்ல முடியாது.
பாடல் முழுவதையும் கட்டாயம் கேட்டேத் தீருவோம். அப்போது நம் மனம் கொள்ளும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத அமைதியை இவரது 5 நிமிட பாடல்கள் தந்துவிடும் அற்புத சக்தி வாய்ந்தவை.
எவ்வளவு ரம்மியம்? எத்தனை வசீகரம்? என்ன ஒரு இனிமை என்று கேட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் ரகங்கள் தான் இவரது பாடல்கள். அவற்றில் ஒரு சில முத்தாய்ப்பான பாடல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
வாணிஜெயராமின் இயற்பெயர் கலைவாணி. ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று இவருக்கு அடைமொழியும் உண்டு. வேலூரில் 30.11.1945ல் பிறந்தார். கர்நாடக இசையில் தேர்ச்சிப் பெற்றவர்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி, ஒடிசி, குஜராத்தி, பெங்காளி என பல மொழிகளில் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். 3 முறை தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
கேள்வியின் நாயகனே, என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம், கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம், நித்தம் நித்தம் நெல்லு சோறு, மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்..., ஒரே நாள் உனை நான், பாரதி கண்ணம்மா, பூந்தென்றலே, நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்...என்று இவரது பாடல்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அனைத்தும் செம மாஸ் ஹிட் ரகங்கள். இதுவரை கேட்காதவர்கள் கட்டாயம் கேட்டுப் பாருங்கள்.
உங்கள் செவிகளைக் குளிரச் செய்யும் இன்னிசை மருந்தாக நிச்சயம் இவை அமையும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடகி நம்மை எல்லாம் தவிக்க விட்டு இன்று (4.2.2023) இறைவனடி சேர்ந்து விட்டார். இந்த செய்தி தமிழத்திரை உலகை மட்டுமல்லாமல் இந்தியத் திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவு குறித்து இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தனது கருத்துகளை இவ்வாறு பகிர்கிறார்.
சங்கர் கணேஷ்கிட்ட தான் நிறைய பாடல்கள் பாடியிருக்காங்க. எங்களோடு ஒரு குடும்பமா இணைஞ்சாங்க. என் கார்ல தான் ஜெமினி ஸ்டூடியோவில் முதல் பாடலைப் பாடுனாங்க.
எங்கிட்ட தான் முதல் பாடல் அரசரடி அந்தக் கண்ணனை என்ற பாடல். அடுத்து அவர் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் வெகு பிரபலமானது. அந்த அம்மா இந்த அளவு முன்னுக்கு வரக் காரணமானவர் அவரது கணவர் ஜெயராம் தான். கூடவே வருவார்.
ஒரு ஆபீஸ் பாய் மாதிரியே அந்த அம்மா கூட நடந்து வந்து அந்த அம்மா உள்ளே பாடுது. இவரு தான் வெளியே இருந்து சிரிச்சி ஓகே பண்ணுவாரு. எனக்கு என்ன வருத்தம்னா இப்ப தான் மத்திய அரசு ஒரு நல்ல விருதை அவருக்கு அறிவிச்சிருக்காங்க. அதை வாங்கறதுக்குக் கூட இறைவனுக்குப் பொறுக்க முடியாம கூப்பிட்டுட்டாரு.
இறைவன் மேல தப்பு இல்ல. இந்த அம்மா தான் எப்படியோ தவறி விழுந்து இறந்துட்டாங்கன்னு தான் கேள்விப்பட்டேன். அது என்னமோ கடவுள் அந்த அம்மாவுக்குத் திருஷ்டி விழுந்த மாதிரி கூப்பிட்டுட்டாரு. நல்ல ஒரு அவார்டு கொடுத்ததுக்காக எனக்கே சந்தோஷமா இருந்துச்சு. நம்ம வாணிஜெயராமுக்குக் கிடைச்சிருக்கே. இவங்க போயி வாங்கிட்டு வரட்டும்னு நினைச்சிருந்தேன். வாங்கிட்டு வரட்டும்னு பார்த்தா இவங்க போயி இறைவன்கிட்டயே போயிட்டாங்க. அந்த ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
என்னென்ன பாட்டு? என்கிட்ட எத்தனையோ பாட்டு பாடியிருக்காங்க. யாரது...? சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது...இதெல்லாம் எவ்வளவு உருக்கமா பாடியிருக்காங்க. பாலைவனச் சோலைல பாடுவாங்க...மேகமே...மேகமே...பால்நிலா தேயுதே...எங்கே தேயுது...பால் நிலா மேலப் போயிடுச்சு.
அப்படி ஒரு பாட்டு...எந்த மியூசிக் டைரக்டரா இருந்தாலும் பாட்டை அவ்வளவு ரசிச்சி ருசிச்சிப் பாடுவாங்க. அப்படிப்பட்ட வாணிஜெயராம் நம்மளை எல்லாம் விட்டுப் போயிட்டாங்க. அவங்க உறவினர் அனைவருக்குமே என்னோட ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிச்சிக்கறேன்.
நீங்களும் அந்த அம்மாவோட ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை பண்ணுங்க. உங்க எல்லோருடைய ஆசிர்வாதமும் அவங்களுக்குப் போயி கடவுள் சரஸ்வதியா அவங்க இருக்கணும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.
2023ல் வாணி ஜெயராமுக்கு பத்மபூசண் விருதை மத்திய அரசு இவருக்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.