ராமன்-சீதையாக நடித்த அண்ணன்-தங்கை… “மனதை புண்படுத்தீட்டீங்க”… கொதிந்தெழுந்த ரசிகர்கள்…
பொதுவாக ஒரு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால், அத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு வருவது சமீப காலத்தில் சகஜமான விஷயம்தான். ஆனால் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு என்றுமே புதிது அல்ல.
சிவாஜி முதன்முதலாக அறிமுகமான “பராசக்தி” திரைப்படத்திற்கு கூட பல எதிர்ப்புகள் வந்தது. இந்த நிலையில் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு வித்தியாசமான முறையில் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1934 ஆம் ஆண்டு பாபுராவ் பெண்டார்க்கர் மற்றும் கே.ராம்நாத் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சீதா கல்யாணம்”. இத்திரைப்படத்தில் சிறுவயது கதாப்பாத்திரம் ஒன்றில் எஸ்.பாலச்சந்தர் நடித்திருந்தார். (பின்னாளில் வீணை பாலச்சந்தர் என்று அறியப்பட்ட இவர் “அந்த நாள்”, “நடு இரவில்” போன்ற பல வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களை இயக்கினார்)
“சீதா கல்யாணம்” திரைப்படம் முழுக்க முழுக்க ராமாயண புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் ஜனக மகாராஜாவாக நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் தந்தையான சுந்தரம் ஐயர். அதே போல் இத்திரைப்படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரரும் சுந்தரம் ஐயரின் மூத்த மகனுமான எஸ்.ராஜம்.
மேலும் இத்திரைப்படத்தில் சீதாவாக நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரியும், சுந்தரம் ஐயரின் மகளும், எஸ்.ராஜமின் தங்கையுமான எஸ்.ஜெயலட்சுமி.
இவ்வாறு நிஜ வாழ்க்கையில் அண்ணன்-தங்கையாக இருந்தவர்கள்தான் அத்திரைப்படத்தில் ராமர்-சீதா கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இது அந்த காலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதாம்.
“அது எப்படி அண்ணன் தங்கையாக இருப்பவர்கள் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கலாம்” என இத்திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதாம். எனினும் இத்திரைப்படம் அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி வெற்றிப்படமாக அமைந்ததாம்.