கல்யாண பந்தியில் எம் ஜி ஆரை சீண்டி பார்த்த சிவாஜி… ப்ளான் போட்டு தூக்கிய தரமான சம்பவம்

by Arun Prasad |   ( Updated:2022-09-21 23:22:33  )
கல்யாண பந்தியில் எம் ஜி ஆரை சீண்டி பார்த்த சிவாஜி… ப்ளான் போட்டு தூக்கிய தரமான சம்பவம்
X

எம் ஜி ஆர் நடித்த திரைப்படங்கள் ஒரு பக்கம் மாபெரும் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு பக்கம் சிவாஜி என்ற பன்முக கலைஞன் உருவாகி வந்தார். யார் போட்டி போட்டாலும் எம் ஜி ஆர் புகழுக்கு எதுவும் ஆகப்போவதில்லை தான். ஆனால் சிவாஜியின் வெரைட்டியான நடிப்பும் சிவாஜிக்கு ரசிகர்கள் அளித்து வந்த வரவேற்பும் எம் ஜி ஆரை தூங்கவிடாமல் செய்திருக்கிறது.

அது 1959 ஆம் ஆண்டு. சிவாஜியின் உக்கிரமான நடிப்பில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. வரலாற்று கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் எம் ஜி ஆரை ஒருவித யோசனைக்குள் தள்ளியது.. அதாவது நாமும் ஒரு வரலாற்றுத் திரைப்படம் எடுத்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.

உடனே ஒரு முடிவை எடுத்தார். கவியரசு கண்ணதாசனை அழைத்து ஊமைத்துரையின் புரட்சிகரமான கதையை உருவாக்க சொன்னார். ஆனால் என்னமோ தெரியவில்லை அத்திரைப்படம் பேச்சுவார்த்தைகளோடே நின்றுவிட்டது. ஆனாலும் உள்ளே அனல் கொதித்துக்கொண்டே இருந்தது.

இந்த கொதிப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. அதாவது 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனுக்கு திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில் எம் ஜி ஆர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கல்யாண பந்தியில் எம் ஜி ஆர் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது சிவாஜி அனைவருக்கும் சாப்பாடு திருப்தியாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பந்தி நடக்கும் இடத்திற்கு வந்தார்.

அப்போது எம் ஜி ஆரிடம் சென்ற சிவாஜி, “நீங்க கத்தியை எடுத்தால் போதும். கைத்தட்ட ஒரு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கு. அதுக்கப்புறமும் ஏன் கோட்டு சூட்டெல்லாம் போட்டு நடிக்கிறீங்க” என்று துடுக்கலாக ஒரு கேள்வியை கேட்டார். அதில் இருந்து தான் எம் ஜி ஆருக்கு ஒரு வெறி வந்திருக்கிறது.

என்ன விஷயம் என்றால், அந்த நேரத்தில் தான் எம் ஜி ஆர் நடித்த “அந்தமான் கைதி” என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியை கண்டது. அதில் எம் ஜி ஆர் கோர்ட்டு சூட்டுடன் தென்படுவார். சிவாஜி இதை தான் குறிப்பிடுகிறாரோ என்ற எண்ணம் வந்தது எம் ஜி ஆருக்கு.

அதனை தொடர்ந்து ஒரு சூறாவளியாக மாறினார் எம் ஜி ஆர். பக்காவான ஒரு பிளானை தயார் செய்தார். அதாவது சிவாஜியை வைத்து ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி, இயக்குனர் பந்தலு, ராமண்ணா போன்றவர்களை வளைத்து தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

அதன் பிறகு தான் “படகோட்டி”, “சந்திரோதயம்”, “ஆயிரத்தில் ஒருவன்”, “ரகசிய போலீஸ் 115” போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்தார் எம் ஜி ஆர். சிவனேனு இருந்தவரை ஒரே வார்த்தையால் உசுப்பேத்தி விட்ட சிவாஜியை அந்த நேரத்தில் கொஞ்சம் தடுமாறத்தான் வைத்தார் எம் ஜி ஆர்.

Next Story