அந்த சீன் நடிக்கிறேன்.. சாப்பாட்டுல இது வேண்டாம்!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா சிவாஜி?..
நடிகர் திலகம் சிவாஜி:
திரையுலகில் பல சிறந்த நடிகர்கள் இருந்தாலும் இருந்தாலும் நூறு சதவீதம் டெடிகேஷன் என்றால் அது சிவாஜியை தவிர வேறு யாரும் இருந்திருக்க முடியாது. ஏழு வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கி வறுமையில் வாடி நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து பராசக்தி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறியவர்.
சிவாஜிக்கு சினிமா மட்டுமே உயிர் மூச்சு, சுவாசம் எல்லாம். சினிமாவை மட்மே உலகமாக பார்த்தவர். எந்த கதாபாத்திரம் என்றாலும் அப்படியே மாறக்கூடிய நடிகர். குடும்ப தலைவன், குடிகாரன், கெட்டவன், காவல்துறை அதிகாரி, மருத்துவர், வழக்கறிஞர், கடவுள் அவதாரம், சுதந்திரபோராட்ட வீரர், புராண, இதிகாசங்களில் வந்த கதாபாத்திரங்கள், வயதானவர் என இவர் போடாத வேஷமே இல்லை. அதனால்தான் இவரை நடிகர் திலகம் என ரசிகர்கள் அழைத்தனர்.
சாப்பாட்டில் கூட நடிப்பு:
நடிப்பதோடு மட்டுமல்ல. தன்னுடன் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு எந்த நெருடலும் ஏற்படக்கூடாது என யோசித்து அதுபோல நடிக்கும் நடிகர் சிவாஜி மட்டுமே. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம்.
பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த ஏ.ஆர்.சீனிவாசன் தனது யுடியூப் சேனலில் சிவாஜி பற்றி பல அரிய தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது:
பட்டாக்கத்தி பைரவன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. மதிய உணவு உடைவேளையின் போது எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருந்தோம். மேஜர் சுந்தர்ராஜன் எங்களுக்கு பரிமாறினார். நான் சிவாஜியின் அருகில் அமர்ந்திருந்தேன். சுந்தர்ராஜன் சாம்பாரை ஊற்றி வந்தார். அப்போது ‘ஏண்டா இதில் வெங்காயம் போட்ருக்கா?’ என அவரிடம் சிவாஜி கேட்டார். சுந்தர்ராஜன் ‘ஆமாம்’ என சொல்லவே சிவாஜி ‘எனக்கு வேணாம்’ என சொல்லிவிட்டார். உடனே நான் ‘ஏன் சார் வெங்காயம் சாப்பிட மாட்டீர்களா?’ என கேட்டேன்.
சாப்பிட்டு முடிந்த பின் காட்சிப்படி சிவாஜியின் அம்மா சவுகார் ஜானகி அவரின் மடியில் உயிர் விடுவது போல காட்சியை எடுத்தார்கள். அப்போது என்னிடம் சிவாஜி ‘இப்ப தெரியுதாடா நான் ஏன் வெங்காயம் சாப்பிடலன்னு.. ஜானகி என் மடியில உயிர் விடுற காட்சி. நான் அவங்களை அணைத்துக்கொண்டு 8 நிமிடம் வசனம் பேசுறேன்.
நான் வெங்காயம் சாப்பிட்டு அந்த வாசனை அவங்கள டிஸ்டர்ப் பண்ணா அவங்க எப்படி செத்தது போல நடிக்க முடியும்? அதான் சாப்பிடல’ என சொன்னார். எனக்கு தெரிந்து உலகத்திலேயே இப்படி யோசிக்கிற ஒரு நடிகர் அவராகத்தான் இருப்பார். சாப்பிடும் போது கூட இதை அவர் யோசிக்கிறார் எனில் ஒவ்வொரு நடிகரும் இதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என சீனிவாசன் கூறினார்.
சிவாஜி, சவுகார் ஜானகி, மேஜர் சுந்தரராஜன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலரும் நடித்த பட்டாக்கத்தி பைரவன் திரைப்படம் 1979ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனது படத்தில் ராமராஜனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட அந்த ஹிட் படமா?!…