ஒரு லட்சத்துக்கு எத்தனை சைபர்?!.. அது கூட தெரியாமல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி!...
நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சிவாஜி. நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர். பாமரன் முதல் அந்த பாமரன் வணங்கும் கடவுள் வரை எல்லா கதாபாத்திரங்களிலும் கலக்கியவர். பாரதியும், முருகனும், கர்ணனும், அபிமன்யூவும், வீரபாண்டிய கட்ட பொம்மனும், வ.ஊ.சியும், சிவனும், நாரதரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என பாமரர்களை நினைக்க வைத்தவர். இவர் அளவுக்கு நடிக்கும் நடிகர் அவருக்கு பின் யாருமில்லை. அவரின் இடத்தை நிரப்ப யாரும் முன்வரவில்லை.
வாழ்நாள் முழுவதும் நடிப்பு நடிப்பு என்றே வாழ்ந்து மறைந்தவர். நடிப்பை தவிர வேறு எதிலும் பெரிய ஆர்வம் இல்லாதவர். எதை பற்றியும் தெரிந்துகொள்ளவும் மாட்டாராம். காலை எழுந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். மாலை வீட்டுக்கு திரும்ப வேண்டும். நண்பர்களிடம் உரையாடுவது, அப்படக்குழுவினருடன் அடுத்தநாள் நடிக்கும் காட்சி பற்றி விவாதிப்பது இப்படித்தான அவரின் ஒவ்வொரு நாளும் கழிந்துள்ளது.
அவரின் சம்பள விபரம் கூட அவருக்கு தெரியாது. அவரின் உதவியாளர், மேனேஜர், அவரின் மகன்கள் வளர்ந்த பின் மூத்த மகன் ராம்குமார் அவற்றை கவனித்துக்கொண்டார். தான் நடிக்கும் படத்திற்கு இதுதான் சம்பளம் என எதையும் சிவாஜி தயாரிப்பாளரிடம் கேட்கவே மாட்டாராம். படம் முடிந்த பின் தயாரிப்பாளர் கொடுக்கும் தொகையை வாங்கி கொள்வார் என்கிறார்கள். சில படங்களுக்கு முன்பணம் கூட வாங்கமாட்டாரம்.
இதையெல்லாம் விட ஆச்சர்யம் என்னவெனில் லட்சத்திற்கு எத்தனை சைபர் என்பது கூட தெரியாமல் அவர் நடித்ததுதான். சிவாஜியின் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஆருர்தாஸ் சமீபத்தில் பாசமலர் டிஜிட்டல் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் சிவாஜி பற்றிய பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். நான் ஒரு முறை சிவாஜியிடம் ‘உங்களிடம் ஒரு லட்சம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் ‘உன்னிடம் கொடுத்துவிடுவேன்’ என்றார். எதற்கு என கேட்டேன். ‘சரியா இருக்கான்னு எண்ணி பார்க்கத்தான்’ என்றார் சிவாஜி. ‘ஏன் நீங்கள் என்ணி பார்க்கமாட்டீர்களா?’ என்றேன். அது தெரிந்தால்தானே!.. ஆமா.. ஒரு லட்சத்தில் எத்தனை ஆயிரம் இருக்கும்? என சிவாஜி என்னிடம் கேட்டார். நூறு ஆயிரம் என்றேன். ‘அடேங்கப்பா!.. நூறு ஆயிரமா?.. அது ரொம்ப பெரிய பணமாச்சே.. சரி. நான் இப்படி கேட்டத வெளிய சொல்லிடாத’ என்றார். ஏன் என நான் கேட்க, ‘எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு நினைச்சிடுவாங்க’ என்றார்.
உண்மைதான்.. நடிப்பை தவிர வேறு எதுவும் உங்களுக்கு தெரியாது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்றுதான்’ என நான் அவரிடம் கூறினேன்’ என ஆரூர்தாஸ் அந்த விழாவில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ராஜ்கிரண் படத்தில் இளையராஜா செய்த அற்புதம்… என்னன்னு தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!!