பெரிய வீடு மட்டும் கட்டாத!.. பாரதிராஜாவுக்கு நடிகர் திலகம் சொன்ன அட்வைஸ்!….

#image_title
Bharathiraja: ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கி வந்த தமிழ் சினிமாவை வாய்க்கால், வரப்பு, காடு, மேடு போன்ற இடங்களுக்கு இழுத்து சென்றவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் இயக்கிய பதினாறு வயதினிலே படத்தின் வெற்றி தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. ‘இப்படி ஒரு படம் வந்து ஓடி விட்டதே.. இனிமேல் நாம என்ன பண்றது?.. என பல இயக்குனர்களையும், நடிகர்களையும் யோசிக்க வைத்தது அந்த படம்.. அதில் எம்.ஜி.ஆரும் ஒருவர். இதை அவரே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார்.
அதனால்தான் பாரதிராஜா டிரெண்ட் செட்டராக பார்க்கப்பட்டார். மண் வாசனை மிக்க பல திரைப்படங்களையும் இயக்கினார். 80களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருந்தார். அவருக்கு பின் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த பல இயக்குனர்கள் பாரதிராஜாவின் சிஷ்யர்களாக இருந்தார்கள். சமீபத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாராடைப்பால் இறந்து போனார்.
சிவாஜியை வைத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜிக்கு மேக்கப் போடாமல், விக் வைக்காமல் நடிக்க வைத்த ஒரே இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. சிவாஜி என்றாலே ஓவர் ஆக்டிங் என சொன்னவர்கள் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு வாயடைத்து போனார்கள். அந்த அளவுக்கு சிவாஜியை மிகவும் இயல்பாக நடிக்க வைத்திருந்தார் பாரதிராஜா.

இதனால் சிவாஜிக்கும் பாரதிராஜாவை மிகவும் பிடிக்கும். இந்த படம் எடுக்கும்போது ‘சென்னைக்கு போய் நடிகனாக வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. நான் ஊரிலிருந்து கிளம்பும்போது நானா? சிவாஜியா? பார்த்துடலாம்’ என்று நினைத்துதான் கிளம்பினேன்’ என பாரதிராஜா சிவாஜியிடம் சொல்ல ‘ எல்லாம் சரி.. உன் ஊர்ல கண்ணாடியே இல்லயாடா?’ என கேட்டிருக்கிறார் சிவாஜி.
ஒருமுறை சிவாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க அங்கே போன பாரதிராஜா சிவாஜியிடம் ‘என்ன நடந்தது?’ என விசாரித்திருக்கிறார். அதற்கு ‘மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கி கொண்டிருந்தேன். 4 மணி ஆகிவிடமே கமலா காபி போட போய்விட்டாள். திடீரென நெஞ்சுவலி. வழக்கமாக என் படுக்கையில் மாத்திரை இருக்கும். ஆனால், அன்று இல்லை. அவ்வளவுதான் நான் சாகப்போகிறேன் என நினைத்தேன். பிரபு.. ராம்குமார் என கத்தியும் யாருக்கும் கேட்கவில்லை. சினிமாவில் எப்படி கத்தி நான் வசனம் பேசியிருக்கிறேன். ஆனால், அன்று நான் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. நல்லவேளையாக காபி கொடுக்க கமலா வந்தாள். அதன்பின் நான் இங்கே இருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார் சிவாஜி.
அதை சொல்லிவிட்டு ‘சொந்த வீடு கட்டியிருக்கிறாயா?’ என சிவாஜி கேட்க பாரதிராஜாவோ ‘4 வீடுகள் கட்டியிருக்கிறேன்’ என பதில் சொல்லியிருக்கிறார். ‘அந்த வீடுகள் பெரிதாக இருக்குமா?’ என சிவாஜி கேட்க, ‘ஓரளவுக்கு பெரியது. ஏன் கேக்குறீங்க?’ என பாரதிராஜா கேட்க, சிவாஜியோ ‘வீட்டை பெரிதாக கட்டாதே.. நீ கூப்பிட்டால் உன் குரல் மற்றவர்களுக்கு கேட்க வேண்டும். அந்த அளவுக்கு வீடு இருந்தால் போதும்’ என அட்வைஸ் சொல்லி இருக்கிறார்.