சிவாஜி கணேசன் சம்பளமே வாங்காமல் நடித்த படமா இது... என்னப்பா சொல்றீங்க?
சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்த திரைப்படம் "நவராத்திரி". இத்திரைப்படத்தை ஏ.பி.நாகராஜன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இப்போது சிவாஜியின் நடிப்பிற்கு உதாரணமான திரைப்படமாக விளங்கி வருகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசங்களை கொடுத்திருந்தார் சிவாஜி கணேசன். இந்த நிலையில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய டாக்டர்.மருதுமோகன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது "நவராத்திரி" திரைப்படம் உருவானது குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
அதாவது சிவாஜி கணேசன், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் சிறு வயதில் இருந்தபோது தம்பாச்சாரி என்ற நாடக நடிகர் 11 வேடங்களில் நடித்தாராம். அந்த நாடகம் இருவருக்கும் பிடித்துப்போனது. அதன் பின் இருவரும் சினிமாத்துறையில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது நடுவில் ஏ.பி.நாகராஜன் இயக்கிய சில திரைப்படங்கள் தோல்வியை தழுவின.
ஆதலால் ஏ.பி.நாகராஜனுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதனை புரிந்துகொண்ட சிவாஜி கணேசன் ஒரு நாள்., ஏ.பி.நாகராஜனிடம், "என்னை மட்டும் முதலீடாக வைத்து ஒரு படம் தயாரியுங்கள்" என கூறியிருக்கிறார். அதாவது தனக்கு சம்பளம் தரவேண்டாம் என்று மறைமுகமாக கூறினாராம். அப்போது தான் சிறு வயதில் பார்த்திருந்த தம்பாச்சாரி நாடகத்தை மனதில் வைத்துக்கொண்டு "நவராத்திரி" திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இவ்வாறு சம்பளமே வாங்காமல் ஒன்பது கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன்.