“சிவாஜி காலில் ஜெய்ஷங்கர் விழவேண்டும்”… அந்த சீனே இங்க கிடையாது… நடிகர் திலகம் செய்த அதிரடி காரியம்…
1971 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெய்ஷங்கர், பத்மினி, வாணிஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “குலமா குணமா”. இத்திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஆசம் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
“குலமா குணமா” திரைப்படம் உருவாகி வந்த காலத்தில் ஜெய்ஷங்கர் தமிழின் மிக முக்கிய நடிகராக திகழ்ந்து வந்தார். அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. தனது தனித்துவமான நடிப்பால் பலரையும் கவர்ந்து அவர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் ஜெய்ஷங்கர்.
“குலமா குணமா” திரைப்படத்தில் ஜெய்ஷங்கர், சிவாஜி கணேசனுக்கு தம்பியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சிவாஜி கணேசனின் காலில் ஜெய்ஷங்கர் விழுவது போல் ஒரு காட்சி எழுதப்பட்டிருந்தது. இந்த காட்சியை விளக்குவதற்காக சிவாஜி கணேசனின் அறைக்குச் சென்றார் இயக்குனர் கோபாலகிருஷ்ணன்.
ஆனால் ஒரு மணி நேரமாகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. சிவாஜி கணேசன் அறைக்குப் போன இயக்குனர், இன்னும் வெளிவரவில்லையே என்று காத்துக்கொண்டிருந்தார் ஜெய்ஷங்கர். அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர் ஒருவரிடம் “இயக்குனர் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறார்?” என ஜெய்ஷங்கர் கேட்டார். இயக்குனர் சிவாஜியின் அறைக்கு உள்ளே அந்த குறிப்பிட்ட காட்சியை மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டார் ஜெய்ஷங்கர்.
மேலும் அந்த உதவி இயக்குனர் “உங்களால்தான் அந்த காட்சியை மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் இயக்குனர்” என ஜெய்ஷங்கரிடம் கூறினாராம். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெய்ஷங்கர், நேராக சிவாஜியின் அறைக்குள் சென்று இயக்குனர் கோபாலகிருஷ்ணனிடம் “நான் காலில் விழும் காட்சியை மாற்றி எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறுகிறார்கள். அதுவும் நான்தான் அதற்கு காரணம் எனவும் கூறுகிறார்கள். என்ன விஷயம்?” என கேட்டார்.
அதற்கு இயக்குனர் “ சிவாஜி என்னிடம் ‘ஜெய்ஷங்கர் பல திரைப்படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் காலில் விழுவது போல் காட்சி இருந்தால் சரியாக வராது. காட்சியை மாற்றி எழுதிவிடு என கூறினார். அதனால்தான் காட்சியை வேறு மாதிரி எழுதி வருகிறேன்” என விடை அளித்தாராம். இதனை கேட்ட ஜெய்ஷங்கருக்கு கடும் கோபம் வந்திருக்கிறது.
உடனே சிவாஜியிடம் “உங்கள் காலில் நான் விழமாட்டேன் என்று எப்போதாவது நான் கூறினேனா? உங்கள் காலில் விழுவது என்னுடைய பாக்கியம்” என கூறினாராம் ஜெய்ஷங்கர். உடனே சிவாஜி நெகிழ்ந்துபோய் ஜெய்ஷங்கரை கட்டிப்பிடித்துக்கொண்டாராம்.