அந்த பாடகர் எனக்கு பாட வேண்டாம்!.. அடம்பிடித்த சிவாஜி!.. எதற்காக தெரியுமா?!..

Sivaji Ganesan
1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி, லலிதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தூக்குத் தூக்கி”. இத்திரைப்படத்தை கிருஷ்ணசுவாமி என்பவர் இயக்கியிருந்தார். ஜி.ராமநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த 11 பாடல்களில் 8 பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருந்தார். ஆனால் இத்திரைப்படம் உருவாகும்போது டி.எம்.சௌந்தரராஜனை வேண்டாம் என்று கூறினாராம் சிவாஜி கணேசன். அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

Thookku Thookki
சம்பளம் அதிகமாக கேட்ட பாடகர்
அது டி.எம்.சௌந்தரராஜன் சினிமாவுக்குள் நுழைந்த தொடக்க காலகட்டம். வெகு சில பாடல்களையே அவர் பாடியிருந்தார். அப்போது “தூக்கு தூக்கி” திரைப்படத்தின் பாடல்களை பாட திருச்சி லோகநாதன் என்பவரை ஒப்பந்தம் செய்ய இருந்தார்கள். அவர் அந்த சமயத்தில் ஒரு பாடலுக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். படக்குழுவினர் அவரிடம் “உங்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமா?” என கேட்டிருக்கிறார். ஆனால் திருச்சி லோகநாதன் அதற்கு ஒப்பக்கொள்ளவில்லை. மேலும் அவர், “டி.எம்.சௌந்தரராஜன்னு ஒரு புது பையன் இப்போ பாடிகிட்டு இருக்கான். அவனை வேணும்ன்னா கூப்புட்டுக்கோங்க” என கூறியிருக்கிறார்.

TM Soundararajan
உடனே அவர்கள் டி.எம்.சௌந்தரராஜனை சென்று பார்த்திருக்கிறார்கள். அவரிடம் “இந்த படத்தில் நீங்கள் 8 பாடல்கள் பாட வேண்டும். ஒரு பாடலுக்கு 250 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்” என கூறியிருக்கிறார்கள். டி.எம்.சௌந்தரராஜனுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லையாம். அது வரை இது போன்ற அதிக சம்பளத்திற்கு அவர் பாடியது இல்லை. ஆதலால் உடனே ஒப்புக்கொண்டார்.
டி.எம்.எஸ்-ஐ வேண்டாம் என்று கூறிய சிவாஜி
ஆனால் சிவாஜி கணேசனோ டி.எம்.எஸ்-ஐ பாட வைப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சிவாஜி கணேசன் பாடல்களை சிதம்பரம் ஜெயராமன்தான் பாடுவாராம். ஆதலால் சிவாஜி கணேசன் டி.எம்.எஸ் வேண்டாம் என கூறினாராம். சிவாஜி கணேசன் இவ்வாறு கூறியதை டி.எம்.எஸ்ஸிடம் கொண்டுசென்றனர்.

Thookku Thookki
அதற்கு டி.எம்.எஸ், “என்னுடைய குரலில் இரண்டு பாடல்களை ரெக்கார்டு செய்து அவருக்கு போட்டுக்காண்பியுங்கள். அதன் பின்பும் வேண்டாம் என்று கூறினால் நான் விலகிவிடுகிறேன்” என கூறியிருக்கிறார். அதன்படி படக்குழுவினர் டி.எம்.எஸ்-ஐ பாடவைத்து சிவாஜி கணேசனுக்கு அனுப்பினார்களாம்.
அந்த பாடல்களை கேட்ட சிவாஜி கணேசன் மெய் மறந்துவிட்டாராம். “குரல் மிக அற்புதமாக இருக்கிறது. இனிமேல் எனது எல்லா படத்திற்கும் இவர்தான் பாடவேண்டும்” என கூறினாராம். அதன் பின் சிவாஜி கணேசன் நடித்த பல திரைப்படங்களுக்கு டி.எம்.எஸ் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.