Cinema History
சிவாஜியிடம் வாலி சொன்ன அந்த ஒரு வார்த்தை… “உடனே ஃப்ரண்டு ஆயிட்டாரு”… இவ்வளவு ஓப்பனாவா சொல்றது…
வாலிப கவிஞர் என்று அழைக்கப்படும் வாலி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என மூன்று தலைமுறை டாப் நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். தன்னை எப்போதும் அப்டேட் செய்துகொள்பவர் வாலி. ஆதலால்தான் அவரை வாலிப கவிஞர் என்று அழைக்கின்றனர்.
வாலி மிகவும் குறும்புக்காரர் என அவருடன் பழகிய பலரும் கூறியிருக்கின்றனர். தனது குறும்புத்தனமான பேச்சின் மூலம் மற்றவரை வசியப்படுத்தி விடுவாராம் வாலி. அப்படி அவரது குறும்புத்தனத்தின் மூலம் சிவாஜி கணேசனை எப்படி தன்னுடைய நண்பராக ஆக்கினார் என்பதை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை, தனது மறைவுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வாலி.
1965 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், தேவிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்புக் கரங்கள்”. இத்திரைப்படத்தை கே.ஷங்கர் இயக்கியிருந்தார்.
ஆர்.சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, கவிஞர் வாலி இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒன்னா இருக்க கத்துக்கனும்” என்ற வாலி எழுதிய பாடலை பதிவு செய்தபோது, அந்த பாடலை கேட்க ஸ்டூடியோவிற்கு வந்தார் சிவாஜி.
அப்போது வாலி, வாயில் வெற்றிலை பாக்கு போட்டு மென்றுக்கொண்டிருந்தார். வாலி எப்போதும் வெற்றிலை போட்டுத்தான் பாடல் எழுதுவது வழக்கம். வாலி எழுதிய அப்பாடலை கேட்ட சிவாஜி, பாடல்கள் நன்றாக இருக்கிறது என கூறினாராம்.
எனினும் சிவாஜி கணேசனுக்கு வாலியுடன் அதிக பழக்கம் இல்லை. ஏனென்றால் அப்போது பல எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை குறித்து வாலி அப்பேட்டியில் “நான் வெற்றிலை பாக்குப் போட்டு உட்கார்ந்திருப்பதை சிவாஜி கணேசன் பார்த்தார். ஏற்கனவே நான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறேன் என அவருக்கு கடுப்பு. இதில் அவர் முன் வெற்றிலை பாக்கு போட்டால் அவருக்கு மேலும் கடுப்பாகத்தானே இருக்கும். என் அருகில் வந்து ‘அது என்ன வெத்தலை போட்டால்தான் பாடல் எழுத வருமா?’ என கேட்டார்.
அதற்கு நான் ‘வெற்றிலை போடாமல் இருந்தால் வாசனை வருமே’ என்றேன் நான். உடனே அவர் மது பழக்கம் எனக்கு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு ‘அந்த பழக்கமெல்லாம் உண்டா?’ என கேட்டார். அதற்கு நான் ‘சிக்கன் எல்லாம் சாப்பிட வேண்டுமே. அது இல்லாமல் எப்படி சாப்பிடுவது’ என்றேன். இதை சென்னதுமே உடனே என் கூட ஃப்ரெண்டு ஆயிட்டார்” என தான் சிவாஜியுடன் நண்பராக ஆனதை மிகவும் ஓப்பனாக கூறியுள்ளார்.