சிவாஜி நடிக்க ஆசைப்பட்ட கதாப்பாத்திரம்… சத்யராஜ்ஜிற்கு வந்த அசத்தல் வாய்ப்பு… புதுசா இருக்கே!!
தமிழ் திரையுலகின் நடிகர் திலகமாக திகழ்ந்து வந்த சிவாஜி கணேசன், தனது வெரைட்டியான நடிப்பால் மக்களை கவர்ந்திழ்த்தார். எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் அக்கதாப்பாத்திரமாகவே மாறும் வல்லமை கொண்ட சிவாஜி கணேசன், நடிப்பிற்கு ஒரு பள்ளிக்கூடமாகவே விளங்கினார்.
சிவாஜி கணேசன், “பராசக்தி” திரைப்படத்தின் மூலம்தான் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பல நாடகங்களில் நடித்து வந்தார்.
அப்போது அவரது பெயர் வி.சி.கணேசன். ஒரு முறை மராட்டிய மன்னர் சிவாஜி வேடத்தில் நடித்திருந்தார். அந்த நாடகத்தை பார்த்த தந்தை பெரியார், வி.சி.கணேசனின் நடிப்பை பாராட்டும் விதமாக சிவாஜி கணேசன் என்று பெயர் வைத்தார். அதன் பிறகு அதுவே அவரது பெயராகியது.
இந்த நிலையில் சிவாஜி கணேசனுக்கு தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பெரியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்ததாம். ஆனால் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.
இதனை தொடர்ந்துதான் ஞான ராஜசேகரன் இயக்கிய “பெரியார்” திரைப்படத்தில் சத்யராஜ் தந்தை பெரியாராக நடித்தார். பெரியாரின் மேல் மிகத் தீவிரமான ஈடுபாடு உடையவர் சத்யராஜ். அவர் நடித்த பல திரைப்படங்களிலும் சரி, பல மேடைகளிலும் சரி,பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை பேசி வந்தவர் சத்யராஜ்.
“பெரியார்” வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தந்தை பெரியாராக நடித்த சத்யராஜ், பெரியாராக வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு பெரியாரை உள்வாங்கி நடித்திருந்தார் சத்யராஜ். பெரியார் கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிக்க ஆசைப்பட்டாலும், சத்யராஜ் அக்கதாப்பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருந்ததுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.