'ப' வரிசை படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகர் திலகம்
'ப' என்ற எழுத்தில் ஆரம்பித்த படங்கள் பல நடிகர்களுக்கு வெற்றிப்படமாகவே அமைந்திருக்கும். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பெரும்பாலான ப வரிசை படங்களை இயக்கியவர் ஏ.பீம்சிங் தான்.
ஏன் என்றால் அவரும் கூட பா வரிசையைச் சேர்ந்தவர் தானே... என்ன ஒற்றுமை என்று பார்த்தீர்களா? அதே ரசனை குறையாமல் செவாலியே புகழ் நடிகர் சிவாஜிகணேசனுக்கு என்னென்ன படங்கள் ப வரிசையில் வெற்றிகரமாக அமைந்தன என்று பார்க்கலாம்.
பாலும் பழமும்
1961ல் வெளியான இந்தப்படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜி, சரோஜாதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். அ.பீம்சிங் இயக்கியுள்ளார். படத்தின் கதை நம்மை இருக்கையுடன் ஒட்ட வைத்து விடும். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்து மாபெரும் வெற்றிப்படமாக்கினர்.
குறிப்பாக தாய்மார்கள் பேராதரவு தந்தனர். பாலும் பழமும், நான் பேச நினைப்பதெல்லாம், பாலும் பழமும், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், காதல் சிறகை, என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ஆகிய பாடல்கள் இடம்பெற்றன.
பாகப்பிரிவினை
1959ல் வெளியான இப்படத்தை ஏ.பீம்சிங் இயக்கினார். சிவாஜிகணேசன், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்தானவை. தாழையாம்பூமுடிச்சி, பாலூட்டி தேரோடும் எங்கள், ஒற்றுமையாய் வாழ்வதிலே, புள்ளையார் கோவிலுக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.
பாவமன்னிப்பு
ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1961ல் வெளியான படம். சிவாஜிகணேசன், சாவித்திரி, தேவிகா, எம்.ஆர்.ராதா, தேவிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தைப் பார்த்து அழாதவர்களே இல்லை எனலாம். அவ்வளவு தரமான நடிப்பை சிவாஜிகணேசன் வெளிப்படுத்தியிருப்பார். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
அத்தான் என்னத்தான், எல்லோரும் கொண்டாடுவோம், காலங்களில் அவள் வசந்தம், பாலிருக்கும், பழமிருக்கும், சிலர் அழுவார் சிலர் சிரிப்பார், வந்த நாள் முதல் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாசமலர்
ஏ.பீம்சிங் இயக்கிய இந்தப்படம் 1961ல் வெளியானது. சிவாஜி, சாவித்திரி, ஜெமினிகணேசன் உள்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ படங்கள் வந்தாலும் இந்தப் படத்தை மிஞ்ச முடியாது. அவ்வளவு பாசத்தைக் கொட்டியிருப்பார்கள்.
தாய்க்குலங்கள் உச்சி முகர்ந்து போற்றிக் கொண்டாடிய படம் இதுதான். இன்றும் பழைய காலத்து நபர்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள். நம்ம பாட்டி, தாத்தாவிடம் கேட்டால் இந்தப்படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளுவார்கள்.
சிவாஜி, சாவித்ரியின் நடிப்பு நம்மை நெகிழச் செய்வது நிச்சயம். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் ரகங்கள். காலத்தை வென்ற படம் இது என்று சொன்னால் மிகையில்லை.
ஏனென்றால் இந்தப்படம் முக்காலத்துக்கும் பொருந்தும். மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள், மலர்ந்தும் மலராத, பாட்டொன்று கேட்டேன், யார் யார் யார் அவள் யாரோ ஆகிய இனிமையான பாடல்கள் நிறைந்த படம் இந்த பாசமலர்.
பார்த்தால் பசி தீரும்
ஏவிஎம் தயாரிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் குட்டி கமல் நடித்து இருக்கிறார். சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்ரி, சௌகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, எம்.சரோஜா, சி.கே.சரஸ்வதி உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இன்னிசையில் பாடல்கள் அருமை.
அன்று ஊமை பெண்ணல்லோ, கொடி அசைந்ததும், பார்;த்தால் பசி தீரும், பிள்ளைக்கு தந்தை ஒருவன், உள்ளம் என்பது, யாருக்கு மாப்பிள்ளை என பல பாடல்கள் படத்தை பிரம்மாண்டமான வெற்றிக்கு வழி வகுத்து சக்கை போடு போட வைத்தன.
இவை தவிர பழநி, பாவமன்னிப்பு, பாபு, படிக்காத மேதை, படித்தால் மட்டும் போதுமா, பந்தபாசம், பச்சைவிளக்கு, பேசும் தெய்வம், பலேபாண்டியா, பார்மகளே பார் ஆகிய படங்களும் சிவாஜி ரசிகர்களைக் கொண்டாட வைத்தது.