அவனுக்கு பேசவே வராது!.. அவன வச்சி எப்படி படம் எடுப்ப?!.. பிரபுவை கலாய்த்த சிவாஜி!…

Published on: April 22, 2023
sivaji
---Advertisement---

திரையுலகில் நடிப்பின் இலக்கணமாக வலம் வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். நாடகத்தில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர் இவர். தான் நடித்த முதல் படமான பராசக்தியிலேயே சிறந்த நடிகராக விளங்கினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து நடிகர் திலகமாக மாறினார். எம்.ஜி.ஆருக்கு எப்படி ரசிகர்கள் இருந்தார்களோ அப்படி சிவாஜிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். இவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் அசத்தியுள்ளார்.

கடவுளாகவும், சுதந்திர போராட்ட வீரர்களாகவும், புராண இதிகாசங்களில் வந்த கதாபாத்திரங்களாகவும் வாழ்ந்து காட்டியவர் சிவாஜி. சிவன் இப்படித்தான் இருப்பாரோ, நாரதர் இப்படித்தான் இருந்திருப்பாரோ, கர்ணனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என மக்களை நம்ப வைத்தவர் இவர். இவருக்கு ராம்குமர், பிரபு என இரண்டு மகன்கள் உண்டு. இதில், பிரபு மட்டும் அப்பாவை போல் நடிகராக மாறிவிட்டார். இவரும் ஹீரோவாக 100 படங்களுக்கும் மேல் நடித்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜிக்கும் நக்கலடிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. இது அவருடன் நெருக்கமாக பழகும் பலருக்கும் தெரியும். யாராக இருந்தாலும் அசால்ட்டாக கிண்டலடிப்பார் சிவாஜி. அது ரசிக்கும்படியும் இருக்கும். பிரபு முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் சங்கிலி. இப்படத்தை சி.வி.ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். பிரபுவை ஹீரோவாக போட்டு படம் இயக்குவது என ராஜேந்திரன் முடிவு செய்தவுடன் அதை சிவாஜியிடம் கூறியுள்ளார். அதற்கு ‘டேய் அவனுக்கு தமிழே சரியா பேச வராது. அவன வச்சி எப்படி படம் எடுப்ப?’ எனக்கேட்டாராம் சிவாஜி. ஆனாலும், அவரை வற்புத்தி சம்மதிக்க வைத்து சங்கிலி படத்தில் பிரபுவை ராஜேந்திரன் நடிக்க வைத்தாராம். ஆனால், படத்தை பார்த்தவர்கள் பிரபுவின் நடிப்பை பார்த்து ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ என அப்போது பேசினார்களாம்.

சிவாஜி எப்படி நக்கலடிப்பார் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சொல்லலாம். பிரபு தனது உடல் எடையை குறைக்க குதிரை சவாரி செய்வாராம். சிவாஜியின் வீட்டுக்கு வந்த ஒருவர் ‘பிரபு இப்படி கஷ்டப்பட்டு குதிர சவாரியெல்லாம் செய்கிறாரே உடல் இளைத்ததா? என கேட்க அதற்கு சிவாஜி ‘அவன் உடம்பு எங்க குறைஞ்சது!. குதிரதான் இளைச்சி போச்சி’ என்றாராம்.

நடிகர் திலகத்துக்கு நக்கல் ஜாஸ்திதான்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.