பத்மினியை ரெஸ்ட் எடுக்க வைத்த நடிகை... எல்லாத்துக்கும் சிவாஜி தான் காரணமா...?
சிவாஜி பத்மினி ஜோடின்னா அப்படி ஒரு பொருத்தம் இருக்கும். இந்த ஜோடியைத் தான் மற்றவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்வார்கள். அதற்கு தில்லானா மோகனாம்பாள் படமே சாட்சி. அதே நேரம் இருவரும் நல்ல நண்பர்கள். தனக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால் பத்மினி முதல் ஆளாக ஆலோசனைக் கேட்பது சிவாஜியிடம் தான். அப்படி ஒரு முறைக் கேட்க சிவாஜி என்ன சொன்னார்னு பார்க்கலாமா...
அந்தக் கால நடிகைகளான பத்மினி, சரோஜாதேவி இருவரது நட்பும் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.
தேனும் பாலும் என்ற படத்தில் பத்மினி, சரோஜாதேவி இருவரும் நடித்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் பத்மினியின் கணவரான ராமச்சந்திரனுக்கு மாரடைப்பு என்ற தகவல் அவருக்கு வந்தது. அப்போது அவரது கணவர் அமெரிக்காவில் இருந்தார். தகவல் வந்ததும் அமெரிக்காவுக்குப் போவதா?
அல்லது இங்கேயே இருந்து படங்களை நடித்துக் கொண்டு இருப்பதா என்ற குழப்பம் பத்மினிக்கு வந்தது. அப்போது அவர் திரையுலகில் பிசியாக இருந்த நேரம். இதற்கு நடிகர் திலகம் சிவாஜியிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்தார் பத்மினி.
சிவாஜி சொன்ன பதில் இதுதான். 'இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் நீ சரோஜாதேவியைக் கேளு. அவள் உன்னை விட வயதில் குறைந்தவள் தான். என்றாலும் தீர்க்கமான முடிவை எடுப்பதில் வல்லவர். அவர் உனக்கு நல்ல முடிவைச் சொல்வார்' என்றார். அப்போது சரோஜாதேவிக்குத் திருமணம் ஆகவில்லை.
அவர் பத்மினியைப் பார்த்து 'உங்கள் வயது என்ன' என்று கேட்டார். அதற்கு '40' என்றார் பத்மினி. 'நாற்பது வயதுக்கு மேல தொடர்ந்து கதாநாயகியாக நடிக்குற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது கஷ்டம். ஒரு காலகட்டத்துல கதாநாயகனுக்கு அம்மாவாகவோ, சித்தியாகவோ, அக்காவாகவோ நடிக்கத் தான் உங்களை அழைப்பாங்க.
அதனால இந்தக் காலகட்டத்துலயே நீங்க அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகிட்டீங்கன்னா நல்லதுன்னு எனக்குத் தோணுது' என்றாராம் நடிகை பத்மினி. சரோஜாதேவி சொன்ன அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு அப்படியே அமெரிக்காவுக்குப் பறந்தவர் தான் அந்த பத்மினி.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.