ஒருநாளைக்கு முன்பே ரிலீஸான சிவாஜி படம்!.. ரசிகர்கள் செய்த அலப்பறையில் அதகளமான தியேட்டர்..
எம்ஜிஆர், சிவாஜி என இரு பெரும் ஜாம்பவான்கள் தமிழ்த்திரை உலகில் கோலூச்சிய காலகட்டத்தில் இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்அவுட், தோரணம் கட்டி திரையரங்கை அலங்கரித்து விடுவார்கள். சிறப்புக்காட்சியில் நடக்கும் களேபரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படி ஒரு தடவை சிவாஜியின் 'ராஜா' படம் ரிலீஸ் ஆனபோது கடலூரில் ரசிகர்கள் எப்படி கொண்டாடினர் என இங்கு பார்ப்போம்.
சிவாஜியின் படங்கள் என்றால் அப்போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். கடலூரில் உள்ள நியூசினிமா திரையரங்கில் ராஜா ரிலீஸ் ஆனது. ராஜா ரிலீசுக்கு முன்பு வரை வெயில், மழை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் நின்று தான் டிக்கெட் எடுக்கவேண்டும். ராஜா வெளியீட்டுக்காக திரையரங்கில் கவுண்டர்கள் புதுப்பிக்கப்பட்டன.
ராஜா 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ். ஆனால் கடலூரில் மட்டும் ரிலீசுக்கு ஒருநாளைக்கு முன்பாகவே 25ம் தேதியே ரிலீஸ் ஆனது. இதே போல வெள்ளை ரோஜா, கௌரவம் படங்களும் ரிலீஸானது.
ராஜா படம் 25ம் தேதி இரவு ரசிகர்களின் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. அதனால் ரசிகர்மன்றத்தினர் அனைவரும் கண்டுகளித்தனர். மறுநாள் முதல் 5 நாள்கள் 5 காட்சிகள் போடப்பட்டன. கடலூர் மெயின்ரோட்டில் தியேட்டர் இருந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம். டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என்று தான் ரசிகர்கள் கேள்வியாக இருந்தது. காலை 9 மணிக்காட்சிக்கு பெண்கள் அதிகமாக வர மாட்டார்கள். பெண்களுக்கான டிக்கெட்டுக்கு வாய்ப்பு இருந்தது. அது சிறுவர்களுக்குத் தான் செல்லும்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அதை ஆண்களுக்குக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நேரத்தில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடுதிப்புன்னு வந்து ஆப்பிள்களைக் கொண்டு வந்து மாலையாக்கி கட்அவுட்டுக்கு போட்டனர்.
தியேட்டரில் படம் ஆரம்பித்ததும் சிவாஜியின் ஸ்டைலுக்கு விசில் சத்தம் காதைப் பிளந்தது. ரங்காவுடன் சிவாஜியின் சண்டைக்காட்சியின்போது முன் இருக்கையை எட்டி உதைத்தனர். படம் பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும் ஆப்பிள் வழங்கப்பட்டது.