எம்ஜிஆர் பட பாடலை தொடர்ந்து 50 முறை கேட்ட சிவாஜி!.. என்ன முடிவெடுத்தார் தெரியுமா?..

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு துவக்கம் முதலே பாடல்களை பாடியது டி.எம்.சவுந்தர்ராஜன் மட்டுமே. ஏனெனில், அவரின் குரல் மட்டுமே இருவருக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும். காதல், சோகம், தத்துவம் என பல சூழ்நிலைகளுக்கு டி.எம்.எஸ் அற்புதமாக பல நூறு பாடல்களை இருவருக்கும் பாடியுள்ளார். அதேபோல், எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை மாற்றியும் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ்.

sivaji
அதேநேரம் சினிமாவில் மாறாதது மாற்றம் மட்டுமே. கண்ணதாசன் பல பாடல்களை எழுதி முன்னணியில் இருந்த போது வாலி வந்து அவருக்கு போட்டியாக மாறி எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை எழுதினார். அதேபோல்தான், இசையமைப்பாளர்களுக்கும் நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் கோலோச்சிய காலத்தில்தான் இளையராஜா வந்து கிராமப்புற மண்வாசனை பாட்டுக்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்தார்.

TMS
அதேபோல்தான் பாடகர்களும். டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருந்தபோதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் யோசுதாஸ் ஆகியோர் வந்தனர். எம்.ஜி.ஆருக்கு முதன் முதலாக அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை எஸ்.பி.பி பாடினார். இதற்கிடையில் சிவாஜி ஒரு படப்பிடிப்பில் இருந்தார். அவரை பார்க்க வந்த அவரின் மகன் பிரபு கையில் ஆடியோ பிளேயர் ஒன்றை எடுத்துவந்தார். ஆயிரம் நிலவே வா பாடலை ஓடவிட்டார். அந்த பாடலை மெய்மறந்து கேட்ட சிவாஜி ‘பிரபு. அந்த பாட்டை மறுபடியும் போடு’ என்றார். பிரபு மறுபடியும் அந்த பாடலை போட மீண்டும் ரசித்து கேட்டிருக்கிறார் சிவாஜி. இப்படியே 50 முறை அந்த பாடலை கேட்டாராம் சிவாஜி.

spb
இந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்ட பிரபு. அப்போது எனக்கு 13 வயதுதான் இருக்கும். அந்த பாடலை 50 முறை கேட்ட அப்பா ‘இந்த பாட்டை யாருப்பா பாடினது?’ என கேட்டார். ‘புதுசா பாலசுப்பிரமணியம்னு ஒருத்தர் பாடியிருக்கார்..அவர்தான் இந்த பாடலை பாடியுள்ளார்’ என நான் சொன்னதும் அப்பா ‘என்னோட அடுத்த படத்துல இவர் பாடணும். விச்சுக்கிட்ட (எம்.எஸ்.விஸ்வநாதன்) சொல்லிடு’ என சொன்னார்.
அப்படித்தான் அப்பா அடுத்து நடித்த ‘சுமதி என் சுந்தரி’ படத்தில் ‘பொட்டு வைத்த முகமோ.. கட்டிவைத்த குழலோ’ பாடலை அப்பாவுக்கு எஸ்.பி.பி.பாடினார். எனக்கும் எவ்வளவோ படங்களில் அற்புதமான பாடல்களை அண்ணன் எஸ்.பி.பி பாடினார் என அந்த பேட்டியில் பிரபு பேசியிருந்தார்.