நடிப்பை குறை சொன்ன உதவி இயக்குனர்… சிவாஜி காதுக்கு வந்த விஷயம்… ஆனா நடந்தது என்ன தெரியுமா??
நடிகர் திலகம் என்ற பட்டத்தை தனதாக்கிக்கொண்ட சிவாஜி கணேசன், தனது தனித்துவ நடிப்பால் மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார். அப்படிப்பட்ட சிவாஜியின் நடிப்பை ஒரு உதவி இயக்குனர் குறை சொன்ன சம்பவத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த “பைரவி” திரைப்படத்தை இயக்கிவர் எம்.பாஸ்கர். “பைரவி” திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பல வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்குனராகும் முன்பு, இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது ஸ்ரீதரின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின் போது சிவாஜி கணேசன் இடம்பெறும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
அந்த காட்சியில் சிவாஜி கணேசன் கொஞ்சம் மிகைப்படுத்தி நடித்திருக்கிறார். இதனை உதவி இயக்குனராக இருந்த பாஸ்கர் சக உதவி இயக்குனர்களிடம் லேசாக முணுமுணுத்து இருக்கிறார். ஆனால் பாஸ்கர் அப்படி சொன்னது சிவாஜியின் காதில் விழுந்துவிட்டது.
உடனே பாஸ்கரின் அருகில் வந்த சிவாஜி கணேசன் “என்னைய பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தீர்களே என்ன விஷயம்?” என கேட்டுள்ளார். தான் பேசியது சிவாஜிக்கு எப்படி தெரியவந்தது? என பயந்துபோய் நின்றிருக்கிறார் பாஸ்கர்.
அதற்கு சிவாஜி “பயப்படாதீங்க, சொல்லுங்க?” என கூறியிருக்கிறார். அதற்கு சக உதவி இயக்குனர் ஒருவர் “இந்த காட்சியில் நீங்கள் நடித்தது கொஞ்சம் மிகையாக இருந்ததாக பாஸ்கரின் அபிப்ராயம்” என சிவாஜியிடம் கூறிவிட்டார்.
உடனே சிவாஜி “பாஸ்கர் சொன்னது சரிதான். இந்த காட்சியில் நடித்து முடித்த போது எனக்கே அந்த எண்ணம்தான் தோன்றியது” என கூறிவிட்டு நேராக இயக்குனர் ஸ்ரீதரிடம் சென்றார்.
“இந்த காட்சியை மீண்டும் ஒரு முறை படமாக்கிவிடலாம்” என ஸ்ரீதரிடம் சிவாஜி கூற, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. இந்த முறை அந்த காட்சிக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தினாராம் சிவாஜி.
சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர்கள் ஒரு உதவி இயக்குனரின் பேச்சை முதலில் காது கொடுத்து கேட்பார்களா என்பது கூட சந்தேகம்தான். ஆனால் நடிகர் திலகமான இருந்த சிவாஜி கணேசன், உதவி இயக்குனர் கூறிய குறையை ஒப்புக்கொண்டு மீண்டும் நடித்தது நடிப்பின் மீதான சிவாஜியின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.