எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன நடிகர் திலகம்..! பதுங்கினால் பூனை... பாய்ந்தால் புலி !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம். அவர் எந்த டயலாக்கையும் எளிதில் பேசி அசத்தி விடுவார். கடினமான காட்சிகளையும் அவர் அசால்டாக நடித்து விடுவார். எந்த ஒரு காட்சியிலும் தன் நடிப்பை யாரும் குறை சொல்லாதவாறு பார்த்துக் கொண்டு அற்புதமாக நடித்து விடுவார். அப்படிப்பட்ட சிவாஜியை தமிழ் சினிமா உலகின் அகராதி என்றே சொல்கின்றனர்.
சக நடிகர்களுக்கும் சரி. இப்போதுள்ள இளம் நடிகர்களுக்கும் சரி. எந்தக் காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்று சந்தேகம் வந்து விட்டால் இந்தக் காட்சிக்கு சிவாஜி எப்படி நடித்து இருப்பார் என்று அவரது பழைய படங்களைப் போட்டுப் பார்க்கின்றனர். அதில் கால்வாசி நடித்தால் கூட இவர்களுக்கு அது அற்புதம் தான்.
ஆனால் அவருக்கு நேர் எதிர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் எப்போதும் சின்ன சின்ன டயலாக்குகளைத் தான் பேசுவார். நீண்ட டயலாக்கைப் பேச மாட்டார். ஆனால் அதிசயமாக ஒரு படத்தில் நீண்ட டயலாக்கை அதுவும் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். அது என்ன படம்னு பார்ப்போமா...
ஒரே டேக்கில் நீண்ட டயலாக் பேசி நடிகர் திலகம் சிவாஜியையே அசத்தியுள்ளார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அந்தப் படம் கூண்டுக்கிளி. படத்தில் இருவரும் நண்பர்கள். நிஜத்திலும் தான். அந்தப் படத்தில் சிவாஜியையே அசர வைத்துள்ளார் எம்ஜிஆர்.
வழக்கமாக சிவாஜி தான் பக்கம் பக்கமாக நீண்ட வசனம் பேசுவார். ஆனால் இந்தப் படத்தில் அவருக்குப் போட்டியாக அதே தொனியில் எம்ஜிஆர் ஒரே டேக்கில் நீண்ட டயலாக்கைப் பேசி அசத்தியிருப்பார். அது இதுதான்.
'ஜீவா ஜீவா ஜீவாவா என் ஜீவாவா... நினைவு தெரிந்த நாள் முதல் என் உடம்பின் உயிராய்... உள்ளத்தின் எதிரொலியாய் கண்ணின் மணியாய் கருத்தின் உருவமாய் இருந்த என் ஜீவாவா....?!
இருளை ஊடுருவிச் செல்லும் மின்னலைப்போல உன் குரல் என் இதயத்தை ஊடுருவிச் செல்கிறதே...! ஜீவா... உதட்டால் அல்ல. உள்ளத்தால் பேசும் உன் பேச்சு.... உறங்கிக்கிடந்த என் உணர்ச்சியைத் தூண்டி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இழுத்துச் செல்கிறதே ஜீவா...
காலம் நமது நட்பைப் பிரித்தாலும் அந்தக் காலத்தால் வளர்க்கப்பட்ட தாடியும் மீசையும் உன் கள்ளம் கபடமற்ற முகத்தை என் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கணம் மறைத்தாலும் நினைத்ததை செய்து முடிக்கும் உன் நெஞ்சை... எதற்கும் அசைந்து கொடுக்காத உன் அகத்தை... பளிங்கு போல் எடுத்துக் காட்டுகிறதே ஜீவா...
ஜீவா எங்கிருந்தாய் இந்த நேரத்தில்... ஏன் வந்தாய் இந்தக் கோலத்தில்...! ஐயோ... வற்றாத ஜீவநதியான உன் வாழ்க்கைப் பாதையிலே சந்தித்து வசந்தகீதம் பாட வேண்டிய நான்... மரணப்பாதையிலே சந்தித்தும் மயான கீதமா பாட வேண்டும்? ஜீவா... ஜீவா... ஜீவா...!' அடேங்கப்பா எவ்வளவு பெரிய டயலாக்... படிக்கும்போதே மூச்சு வாங்குகிறது அல்லவா..?
1954ல் டி.ராமண்ணாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விந்தன் கதை திரைக்கதை வசனத்தில் உருவான படம் கூண்டுக்கிளி. இந்த ஒரே படத்தில் தான் எம்ஜிஆரும் சிவாஜியும் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் தங்கராஜ் என்ற கதாபாத்திரத்தில் எம்ஜிஆரும் ஜீவா என்ற கேரக்டரில் சிவாஜியும் இணைந்து நடித்தனர். இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.
ஒரு நடிகன் ஆனவன் நடிக்க வந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். பதுங்கினால் பூனையாகவும், பாய்ந்தால் புலியாகவும் இருக்க வேண்டும்.